தமிழகப் பள்ளிகள் மீண்டும் திறப்பு; தேதியை முடிவு செஞ்ச மாநில அரசு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை தீவிரம் காட்டி வருகிறது. இதையொட்டி பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் கடந்த ஓராண்டாக மூடப்பட்டு வீட்டிலிருந்த படியே மாணவர்கள் பாடம் படித்து வருகின்றனர். இந்த சூழலில் 2020-21ஆம் கல்வியாண்டு முடிவுக்கு வந்ததால், கடந்த மே ஒன்றாம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை ஆசிரியர்கள் யாரும் பள்ளிக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் அடுத்த கல்வியாண்டு தொடங்கவுள்ளது. ஆனால் கடந்த கல்வியாண்டின் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இன்னும் நடத்தப்படவில்லை.

இதற்கிடையில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி திமுக ஆட்சிக்கு வந்தது. மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொறுப்பேற்றுள்ளார். இவர் துறை ரீதியாக தினந்தோறும் ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகிறார். அதில் பிளஸ் 2 பொதுத்தேர்வு, மத்திய அரசின் நிதியுதவி திட்டங்கள், புதிய கல்வி ஆண்டிற்கான ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி இம்மாத இறுதியில் புதிய கல்வியாண்டிற்கான பணிகள் தொடங்கப்படவுள்ளன. இதையொட்டி ஆசிரியர்களை பள்ளிக்கு வரவழைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இரண்டு வார முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது. எனவே ஊரடங்கு முடிந்தவுடன் மே 25ஆம் தேதி முதல் ஆசிரியர்களை நேரடியாக பள்ளிக்கு வரவழைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook Comments Box
Author: sivapriya