வண்ணங்களில் பூத்துக்குலுங்கும் ரோஜாப்பூக்கள்: சுற்றுலாப் பயணிகள் இல்லாமல் வெறிச்சோடியது

கொடைக்கானல் ரோஸ் கார்டனில் பல வண்ணங்களில் ரோஜாக்கள் பூத்துக்குலுங்கும் நிலையில் அதைப் பார்த்து ரசிக்க ஆண்டுதோறும் வரும் சுற்றுலாப் பயணிகள் இல்லாமல் வெறிச்சோடிக்காணப்படுகிறது.

தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாகவே சுற்றுலாத்தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதால் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கொடைக்கானல் மலைப்பகுதி சுற்றுலாபயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் அனைத்து சுற்றுலாத்தலங்களும் மூடப்பட்டுள்ளன.

கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள சுற்றுலாத்தலங்களில் சுற்றுலாபயணிகளை அதிகம் கவரும் வகையில் உள்ளது தோட்டகலைத்துறையினர் மூலம் பராமரிக்கப்படும் ரோஜா தோட்டம். இங்கு பல்வேறு வகையான ரோஜாக்கள் பராமரிக்கப்பட்டுவருகின்றன.

மொத்தம் 16,000 ரோஜா செடிகள் இந்த ரோஸ் கார்டனில் உள்ளது. இந்த செடிகளை பராமரிப்பதற்கு என பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கொடைக்கானலில் கோடை சீசனான ஏப்ரல், மே மாதங்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலாபயணிகள் ரோஸ் கார்டனில் பூத்துக்குலுங்கும் பல்வேறு வகையான ரோஜாப் பூக்களை கண்டுரசிப்பது வழக்கம்.

இந்த ஆண்டு வழக்கம் போல் ரோஜா செடிகளில் பல வண்ணங்களில் பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. ஆனால் இதை ரசிக்கத்தான் சுற்றுலாபயணிகள் இல்லாதநிலை நிலவுகிறது. இதனால் ரோஸ் கார்டன் வெறிச்சோடிக்காணப்படுகிறது.

கரோனா இரண்டாவது அலை முடிவுக்கு வர இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால் சுற்றுலாபயணிகளுக்கு இந்த கோடை சீசனில் கொடைக்கானல் சென்றுவர தடை தொடரும் என தெரிகிறது.

கொடைக்கானலில் கோடை மழை தொடர்ந்து பெய்துவரும் நிலையில் விரைவிலேயே பூத்துக்குலுங்கும் ரோஜா பூக்கள் சேதமடையும் நிலையிலும் உள்ளது.

Facebook Comments Box
Author: sivapriya