பைசர் நிறுவனத்திடம் 10 கோடி தடுப்பூசிகளை வாங்குவதற்கு பிரேசில் அரசு ஒப்பந்தம்

பிரேசிலியா,

கொரோனா தொற்றால் மிக மோசமான பாதிப்புகளை சந்தித்த பிரேசில் நாட்டில், தற்போது கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அந்த நாட்டில் அஸ்ட்ரா ஜெனகா, சினோவாக் மற்றும் பைசர் ஆகிய 3 நிறுவனங்களின் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.

தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வந்தாலும், தினமும் அங்கு சராசரியாக 2 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழக்கின்றனர். இதுவரை பிரேசிலில் 4 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது ஒரே நம்பிக்கையாக இருக்கும் தடுப்பூசியை பொதுமக்கள் அனைவருக்கும் செலுத்த அந்நாட்டு அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் பைசர் நிறுவனத்திடம் மேலும் 10 கோடி தடுப்பூசிகளை வாங்குவதற்கு பிரேசில் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி, பைசர் நிறுவனத்திடம் இருந்து இந்த ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் வரை தடுப்பூசிகள் பெறப்படும் என பிரேசில் அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்த ஆண்டு துவக்கத்தில் 10 கோடி தடுப்பூசிகளுக்கு பிரேசில் அரசு பைசர் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்திருந்தது. அதில் இதுவரை 16 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே பிரேசில் அரசிடம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments Box
Author: sivapriya