இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல்: ராக்கெட் தாக்குதலில் கேரள நர்சு பலியான சோகம்

டெல் அவிவ்,

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேல் ராணுவம் இடையே கடந்த இரு தினங்களாக கடும் மோதல் நடந்து வருகிறது.

இந்த நிலையில் ஹமாஸ் போராளிகள் நடத்திய ராக்கெட் தாக்குதலில் இஸ்ரேலில் வேலை பார்த்து வந்த கேரள நர்சு ஒருவர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர் சவுமியா (வயது 30). நர்சான இவர் கடந்த 7 ஆண்டுகளாக இஸ்ரேலின் அஷ்கெலோன் நகரில் 80 வயது மூதாட்டி ஒருவரை கவனித்து வந்தார்.

கேரளாவில் வசித்து வரும் கணவர் சந்தோசுடன் தினமும் வீடியோ காலில் பேசும் சவுமியா, சமீப நாட்களாக இஸ்ரேல் ராணுவம் மற்றும் பாலஸ்தீன போராளிகள் இடையே அதிகரித்து வரும் பதற்றம் குறித்து வேதனை தெரிவித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் சவுமியா வழக்கம்போல் தனது கணவர் சந்தோசுடன் வீடியோ காலில் பேசினார். அப்போதும் அவர் இஸ்ரேல் நகரங்கள் மீது பாலஸ்தீன போராளிகள் ராக்கெட் தாக்குதல் நடத்துவது பற்றி கவலையுடன் விவரித்துக்கொண்டிருந்தார்.

அப்போது, சவுமியா இருந்த இடத்தில் குண்டு வெடித்தது போல பயங்கர சத்தம் கேட்டது. அதனை தொடர்ந்து சவுமியா எதுவும் பேசவில்லை.

இதனால் கடும் அதிர்ச்சியடைந்த சந்தோஷ் உடனடியாக அஷ்கெலோன் நகரில் உள்ள சவுமியாவின் நண்பர்களை தொடர்பு கொண்டு நிலைமையை எடுத்துக்கூறினார்.

அதனை தொடர்ந்து சவுமியாவின் நண்பர்கள் உடனடியாக அவரது வீட்டுக்குச் சென்று பார்த்தபோது ராக்கெட் தாக்குதலில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் சவுமியாவின் கணவர் சந்தோஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை மீளா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக தனது தாய் இறந்துவிட்டார் என்பதை சவுமியாவின் 9 வயது மகன் நம்ப மறுப்பதாகவும் அவனுக்கு ஆறுதல் சொல்வது மிகவும் கடினமாக உள்ளதாகவும் சந்தோசின் குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவித்தனர்.

இதனிடையே இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் சவுமியாவின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக மத்திய வெளியுறவு இணை மந்திரி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box
Author: sivapriya