வெறும் 10 நிமிடத்தில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் கருவேப்பிலை சாதத்தை கமகம வாசத்தோடு எப்படி செய்வது?

உங்களுடைய வீட்டில் வடித்து மிஞ்சிய சாதம் இருந்தாலும் அதில் சுட சுட இந்த கருவேப்பிலை சாதம் தயார் செய்யலாம். அப்படி இல்லை என்றால் சூடான சாதத்தை ஆற வைத்து, இந்த கருவேப்பிலை சாதத்தை சட்டென்று செய்துவிடலாம். உங்களுக்கு தேவை இரண்டு கைப்பிடி அளவு கறிவேப்பிலை அவ்வளவு தான். மற்றபடி சமையலறையில் இருக்கக் கூடிய பொருட்களை வைத்தே கருவேப்பிலை சாதத்தை சுலபமான முறையில் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

karuvepilai-sadam1

பச்சை பசேலென பிரஷ்ஷாக இருக்கும் கருவேப்பிலைகளை 2 கைப்பிடி அளவு எடுத்து சுத்தம் செய்து, தண்ணீரில் போட்டு அலசி தண்ணீர் இல்லாமல் உலர வைத்து விடவேண்டும். கழுவிய இந்த கருவேப்பிலைகளை ஒரு வெள்ளைத் துணியில் போட்டு அப்படியே ஃபேனுக்கு கீழே வைத்தாலே போதும். கருவேப்பிலைகளில் இருக்கும் தண்ணீர் சீக்கிரமே ஆறிவிடும். ஆரிய இந்த கருவேப்பிலைகளை கடாயில் போட்டு எண்ணெய் ஊற்றாமல் வறுத்துக் கொள்ள வேண்டும். கருவேப்பிலை மொறுமொறுவென மாற வேண்டும். அதேசமயம் கருவேப்பிலையை கருகாமலும் வறுக்க வேண்டும்.

வருத்த இந்த கருவேப்பிலைகளை நன்றாக ஆற வைத்து, மிக்ஸி ஜாரில் போட்டு நைஸாக பொடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பொடி பச்சை நிறத்தில் வர வேண்டும். அப்போதுதான் கருவேப்பிலை சாதம் நன்றாக இருக்கும்.

karuvepilai-sadam2

குழையாத சாதத்தை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு பரப்பி ஆற வைத்துக் கொள்ளுங்கள். சூடான சாதத்தில் வெரைட்டி ரைஸ் தயார் செய்தால் குழைந்துவிடும். 1 கப் வெள்ளை சாதம் தயாராக ஒரு பாத்திரத்தில் இருக்கட்டும். 1 கப் சாதத்திற்கு, 2 கைப்பிடி அளவு கறிவேப்பிலைகளை பொடி செய்தால் சரியாக இருக்கும்.

இப்போது சாதம் தாளிப்பது எப்படி என்பதை பார்த்துவிடுவோம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு – 1 ஸ்பூன், உளுந்து – 1 ஸ்பூன், கடலைப்பருப்பு – 1 ஸ்பூன், கறிவேப்பிலை – 1 கொத்து, வறுத்த வேர்கடலை – 2 ஸ்பூன், முந்திரி – 6, வரமிளகாய் – 3, பச்சை மிளகாய் கீனியது – 3 இந்த எல்லாப் பொருட்களையும் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

karuvepilai-sadam3

அடுத்தபடியாக பெருங்காயம் – 2 சிட்டிகை, மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், கெட்டியாக இருக்கும் புளிக்கரைசல் – 1 ஸ்பூன் (சிறிய நெல்லிக்காய் அளவு புளி), இவைகளை சேர்த்து மீண்டும் ஒருமுறை நன்றாக கலந்துவிட்டு, இறுதியாக மிக்சியில் அரைத்து வைத்திருக்கும் கருவேப்பிலை பொடியையும் கடாயில் சேர்த்து 2 வதக்கு வதக்கி, அதன் பின்பு தேவையான அளவு உப்பு போட்டு, தயாராக இருக்கும் சாதத்தைக் கடாயில் கொட்டி பக்குவமாக கிளறி சூடு செய்தால், கமகம பாசத்தோடு சூப்பரான ஆரோக்கியம் தரும் கருவேப்பிலை சாதம் ரெடி. லன்ச் பாக்ஸ் கூட இதை நீங்கள் செய்து கொடுக்கலாம். தொட்டுக்கொள்ள ஒரு உருளைக்கிழங்கு வருவல், கருணைக்கிழங்கு வறுவல், வத்தல், இப்படி உங்களுக்கு விருப்பமானதை சைட் டிஷ் ஆக பரிமாறலாம். ட்ரை பண்ணி பாருங்க.

Author: admin