சுவையான மசாலா நெய் மீன் குழம்பு. இப்படி ஒருமுறை செய்து பாருங்கள் சுவை உங்கள் நாவிலேயே ஒட்டிக் கொள்ளும்

இயல்பாகவே அனைவரும் மீனை விரும்பி சாப்பிடுவார்கள். ஒவ்வொருவர்க்கென்று மீன் குழம்பு வைக்கும் முறையில் தனிப்பட்ட விதம் உள்ளது. ஆனால் இங்கே இரண்டு விதமான மசாலாக்கள் மூலம் சுவையான காரசாரமான மீன் குழம்பு வைக்கப் போகின்றோம். இதை ஒரு முறை சுவைத்தால் எப்பொழுதும் நீங்கள் இந்த முறையை பின்பற்றியே மீன் குழம்பு வைப்பீர்கள்.

Meen

மீன் குழம்பு வைக்க தேவையான மசாலா – 1 :

அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடானதும் அதில் ஒரு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து நன்கு வறுக்க வேண்டும். வெந்தயம் பொன்னிறமாக வரும்வரை வறுக்க வேண்டும். பின்னர் வறுத்து எடுத்த வெந்தயம் 10 பல் தேங்காய், ஒரு பழுத்த பெரிய தக்காளி இவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக விழுதாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

மசாலா – 2 :

அடுப்பில் கடாயை வைத்து கடாய் சூடானதும் அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பின்னர் மூன்று வர மிளகாய், பத்திலிருந்து பதினைந்து சின்னவெங்காயம், நான்கு துண்டுகளாக வெட்டி எடுத்த ஒரு பெரிய தக்காளி, சிறிதளவு கறிவேப்பிலை இவற்றைச் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கி எடுக்கவேண்டும். வதக்கிய மசாலாவை ஆறிய பின்னர் மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

மீன் குழம்பு வைக்க தேவையான பொருட்கள்:

நெய் மீன் – 1/4 கிலோ, புளி – 100 கிராம், சின்ன வெங்காயம் – 10, குழம்பு மிளகாய் தூள் – 2 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், வெந்தயம் – 1/2 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு, கருவேப்பிலை – சிறிதளவு, கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை:

முதலில் மீனை சுத்தம் செய்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் புளியை ஊறவைத்து கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் அல்லது சமையல் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் அதில் சிறிதளவு வெந்தயம், சீரகம் சேர்த்து நன்கு பொரிந்தவுடன் சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும். வெங்காயம் நன்கு பொன்னிறமாக வதங்கியவுடன் அரைத்து வைத்த தேங்காய் தக்காளி மசாலாவை(மசாலா 1) சேர்க்க வேண்டும். பின்னர் இதனுடன் அரைத்து வைத்துள்ள வெங்காயம் வரமிளகாய் தக்காளி கலவையை(மசாலா 2) சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

meen

மசாலா நன்றாக வதங்கியதும் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளற வேண்டும். பின்னர் கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரை ஊற்றவேண்டும். இவை அனைத்தும் ஒன்றாக சேர்ந்து நன்றாக கொதிக்கும் வரை மூடி வைக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து சுத்தம் செய்த மீன் துண்டுகளை போட்டு மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும். சிறிது நேரத்தில் நல்ல சுவையான மீன் குழம்பு தயாராகிவிடும். அதன் மீது கொத்தமல்லி தழைகளை சிறிய துண்டுகளாக வெட்டி தூவி விடவேண்டும். இந்த மீன் குழம்பினை இப்படி ஒருமுறை வைத்துப் பாருங்கள். இதன் சுவையை உங்கள் வாழ் நாளில் உங்களால் மறக்கவே முடியாது.

Author: admin