எலுமிச்சை பழத் தோலில் இத்தனை நன்மைகள் உள்ளதா! இது தெரிஞ்சா இனிமே யாரும் எலுமிச்சை பழத் தோலை தூக்கி எறியவே மாட்டீங்க.

இதுவரை நாம் எலுமிச்சை பழத்தை அதிகம் ஜூஸ் போடுவதற்கும் உணவு சமைக்கும் பொழுது சுவைக்காக அதில் சிறிதளவு எலுமிச்சை பழச்சாறு சேர்த்தும் பயன்படுத்தியிருப்போம். எலுமிச்சை பழத்தில் விட்டமின் சி உள்ளது. அதே போல் இது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. இவ்வாறு எலுமிச்சை பழத்தின் பயன் அனைவரும் தெரிந்ததே. பொதுவாக அனைவரும் எலுமிச்சை பழத்தை பயன்படுத்திவிட்டு அதன் தோலை தூக்கி எறிவது வழக்கம். ஆனால் நாம் தூக்கி எறியும் எலுமிச்சைப்பழ தோலினால் நமக்கு நிறைய பயன்கள் இருக்கிறது. இந்த எலுமிச்சை பழ தோலினால் என்னென்ன பயன்கள் உள்ளன என்பதைப் பற்றி இங்கு பார்ப்போம்.

elumichai thool

குறிப்பு 1:

வீட்டில் உபயோகப்படுத்தும் தோசைகல் எப்பொழுதும் ஓரங்களில் அடி பிடித்ததுபோல் சுரசுரப்பாக இருக்கும். இதனால் தோசை சுடும்போது தோசை சரியாக வராமல் தோசைக் கல்லிலேயே ஒட்டிக்கொள்ளும். இந்த பிரச்சனையை சரி செய்ய தோசைக்கல்லை அடுப்பில் மிதமான தீயில் வைத்து தோசை கல் சிறிது லேசாக சூடாக இருக்கும் பொழுதே ஒரு எலுமிச்சைபழ தோலில் சிறிதளவு தூள் உப்பு தடவி தோசைக்கல் முழுவதும் நன்றாக தேய்த்துவிட வேண்டும். பிறகு வெறும் தண்ணீர் வைத்து தோசைக்கல்லை கழுவிவிட்டு, ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீர் ஒன்றரை ஸ்பூன், சமையல் எண்ணெய் ஒரு ஸ்பூன் சேர்த்துக் எடுத்துக்கொண்டு, அதில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து தோசைக்கல்லில் சேர்த்து தேய்த்து விட்டு பிறகு மெல்லியதாக நைசாக தோசை சுட்டால் தோசை ஒட்டாமல் வரும்.

குறிப்பு 2:

வீடுகளில் பயன்படுத்தப்படும் செம்பு அல்லது பித்தளை பாத்திரங்கள் எவ்வளவுதான் அழுத்தமாக தேய்த்து எடுத்தாலும் விரும்பிய அளவிற்கு பளபளவென்று மாறுவதில்லை. ஆனால் ஒரு எலுமிச்சம் பழத்தோலில் ஒரு ஸ்பூன் சோடா மாவு சேர்த்து அதனை இந்த செம்பு அல்லது பித்தளை பாத்திரங்கள் மீது சிறிது நேரம் அழுத்தமாக தேய்த்த பின்னர் அதனை நீரில் கழுவினால் புது பாத்திரம் போல் பளபளவென்று அழகாக இருக்கும்.

elumichai thool

குறிப்பு 3:

வீடுகளில் உபயோகப்படுத்தப்படும் ஃப்ரிட்ஜில் சிலர் அதிக பொருட்களை ஸ்டோர் செய்து வைத்திருப்பார்கள். இதனால் ஒவ்வொரு முறை பிரிட்ஜை திறக்கும் பொழுதும் ஒரு விதமான தேவையற்ற வாசம் வீசும். இந்த வாசனை ஒரு நல்ல வாசனையாக இருக்காது. இதனை தவிர்ப்பதற்கு ஒரு எலுமிச்சம் பழத்தோலில் சிறிதளவு சோடாமாவு சேர்த்து அதை ஒரு சிறிய தட்டு அல்லது சிறிய கிண்ணத்தில் வைத்து ஃப்ரிட்ஜில் ஒரு மூலையில் வைத்து விட்டால் தேவையற்ற வாசனையை அகற்றி ஒரு நல்ல மணத்தை உண்டாக்கும்.

குறிப்பு 4:

மதியம் வேளையில் பிரியாணி அல்லது நெய் சோறு இவ்வாறு சற்று ஜீரணமாக அதிக நேரம் எடுக்கும் உணவுகளை சாப்பிட்டோம் என்றால் அது ஒரு சில சமயங்களில் நெஞ்சு எரிச்சலை உண்டாக்கும். அதன் பிறகு வேறு எந்த உணவுகளையும் சாப்பிட இயலாது. இதனை சரிசெய்ய ஒரு எலுமிச்சம் பழத்தோலை நான்காக வெட்டி எடுத்து கொண்டு அதனை சிறிதளவு உப்பில் பிரட்டி எடுத்து அதனை வெறும் வாயில் மென்று விழுங்கி விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் சிறிது நேரத்தில் நெஞ்சு எரிச்சல் சரியாகி நீங்கள் பழைய நிலைக்கு திரும்பலாம்.

elumichai thool

குறிப்பு 5:

சமையலுக்குப் பயன்படுத்திய பின்னர் மீதமுள்ள எலுமிச்சை தோலை ஒரு கிண்ணத்தில் போட்டு அதோடு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விடவேண்டும். சிறிது நேரம் நன்றாக கொதித்த பின்னர் அடுப்பை அணைத்து விட்டு அந்த எலுமிச்சை பழச்சாறு நிறைந்த தண்ணீரை ஒரு டம்ளரில் சிறிதளவு எடுத்து அதனுள் தினந்தோறும் பல் துலக்கப் பயன்படுத்தும் பிரஷை சிறிது நேரம் ஊற வைத்து பின்னர் கழுவினால் பிரசஷில் படிந்துள்ள மஞ்சள் கறைகள் அனைத்தும் சுத்தமாகிவிடும். இதனை மாதம் ஒருமுறை நீங்கள் செய்யலாம்.

elumichai thool

குறிப்பு 6:

எலுமிச்சை பழத்தோல் சேர்த்து தண்ணீரை கொதிக்க வைத்து, ஆறியதும் அதனுடன் பாத்திரம் துளக்க பயன்படுத்தும் ஏதேனும் ஒரு லிக்விட் சிறிதளவு, சோடா மாவு சிறிதளவு, சமையல் உப்பு சிறிதளவு சேர்த்து நன்றாக கலக்கி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளலாம். வீடு துடைக்கும் பொழுது அல்லது கிச்சனில் அடுப்பு மற்றும் அதை சுற்றியுள்ள எண்ணெய் கரைகளை சுத்தம் செய்யும் பொழுதும் டேபிள், பிரிட்ஜ், கண்ணாடி, ஜன்னல் இவ்வாறு வீட்டில் உள்ள பொருட்களை சுத்தம் செய்யும்பொழுதும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இப்படி பல நன்மைகள் கொண்ட எலுமிச்சை பழ தோலை தூக்கி எரியாமல், எலுமிச்சை பழத்தினை உபயோகப்படுத்தி விட்டு பின்னர் அதன் தோலினை ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு பிரிட்ஜில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு தேவைப்படும் பொழுது ஒவ்வொன்றாக எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

Author: admin