தங்கம் உங்கள் வீட்டை விட்டு அடகு கடைக்கு செல்லாமல் இருக்க நெல்லிக்காய், துளசி கொண்டு இந்த பரிகாரம் செய்யுங்கள்

எத்தனையோ பொருட்களை நம் வீட்டிற்காக ஆசையோடு வாங்கி சேர்க்கும் சந்தோஷத்தை விட, மன திருப்தியை விட, ஒரு குண்டுமணி தங்கத்தை வாங்கும் போது நமக்கு இருக்கும் சந்தோஷத்திற்கு அளவே இருக்காது. இந்த தங்கத்தின் மீது மட்டும் ஏன் இத்தனை மோகம். காரணம், மற்ற பொருட்களை நாம் வாங்கி விட்டால் அந்தப் பொருளுக்கான பண மதிப்பு என்பது குறைந்துவிடும். அதுவே அந்த பணத்தை நாம் தங்கத்தில் முதலீடு செய்தோம் என்றால், நம்முடைய பணத்தின் மதிப்பு குறையாமல் நம்மிடமே இருக்கும். தங்கத்தில் முதலீடு செய்த பணத்தை நாம் எப்பொழுது வேண்டுமானாலும் திரும்பவும் எடுத்துக் கொள்ள முடியும். எதிர்பாராத செலவினை சமாளிப்பதற்காக தான் நடுத்தர மக்கள் பணத்தை தங்கமாக மாற்றி வைத்துக் கொள்வார்கள். அவசர தேவைக்கு தங்கத்தை அடமானம் வைத்தது பணத்தைப் புரட்டலாம் அல்லவா? ஆனால் நம் வீட்டு மகாலட்சுமியை நம் அவசர தேவைக்காக கொண்டு போய் அடகு கடையில் அடமானம் வைப்பது என்பது மிகவும் தவறான ஒன்று. வேறு வழியே இல்லை என்ற பட்சத்தில் மட்டும் நகையை அடமானம் வைத்துக் கொள்ளலாமே தவிர, அடிக்கடி நம் வீட்டு நகையை வங்கியிலோ, மார்வாடி கடையிலோ அடமானம் வைக்க கூடாது.

gold1

நம் வீட்டில் உள்ள நகைகள் அடமானத்திற்கு செல்லாமல் இருக்க வேண்டுமானால் அந்த மகாலட்சுமியின் ஆசீர்வாதமும், விஷ்ணு பகவானின் ஆசிர்வாதமும் நமக்கு அவசியம் தேவை. நம்முடைய சாஸ்திரப்படி நெல்லிக்காய் விஷ்ணுவின் அம்சமாகவும், துளசியை மகா லட்சுமியின் அம்சமாகவும் கூறுவது வழக்கம். இந்த இரண்டு பொருட்களையும் எப்படி பயன்படுத்தினால் நம் வீட்டில் இருக்கும் தங்கமானது நம்மிடமே இருக்கும் என்பதை பற்றி தெரிந்துகொள்ள தான் இந்த பதிவு.

gold4

முதலில் நெல்லிக்காயை என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்? நம் வீட்டின் மகாலட்சுமியாக கூறப்படும் பெண்கள், இந்த நெல்லிக்காயை வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து குளிக்க வேண்டும். நெல்லிக்காயில் உள்ள கொட்டையை நீக்கி விட்டு மிக்ஸியில் அரைத்து, அந்த விழுதினை தலையில் தேய்த்துக் குளிக்கலாம். வெள்ளிக்கிழமை அன்று இப்படி தலைக்கு குளிப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. வீட்டுப் பெண்கள் இப்படி செய்யும் பட்சத்தில் அந்த மகாலட்சுமியினவள் அவர்களது வீட்டிலேயே வாசம் செய்வாள் என்பது ஐதீகம்.

nellikai

இரண்டாவதாக துளசி. பொதுவாக பெருமாள் கோவில்களில் விஷ்ணு பகவானுக்கு துளசியால் அர்ச்சனை செய்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். துளசியை பெருமாளின் பாதங்களில் தூவி அர்ச்சனை செய்துவிட்டு, அந்த துளசியினை நமக்கு பிரசாதமாக கொடுப்பார்கள். அப்படி கோவிலில் பிரசாதமாக நாம் பெறப்படும் துளசியை, நம் வீட்டில் நகை பெட்டியில் வைப்பது மிகவும் சிறந்தது. பெருமாளின் பாதங்களில் இருந்து எடுக்கப்பட்ட துளசியில் மகாலட்சுமியின் அம்சம் நிறைந்திருக்கும். இப்படி நீங்கள் பெருமாள் கோவிலுக்கு சென்று வரும் போதெல்லாம் உங்களுக்கு கிடைக்கும் துளசியை உங்கள் நகை வைக்கும் பெட்டியில் வைத்து வாருங்கள். துளசி காய்ந்து விட்டால் அதை எடுத்து விட்டு, கோவிலிலிருந்து புது துளசியை வாங்கிவந்து வைத்துக்கொள்ளலாம். இப்படி நீங்கள் தொடர்ந்து செய்து வரும்போது உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் முன்னேற்றத்தை உங்களால் நிச்சயம் உணர முடியும். வீட்டில் இருக்கும் கன்னிப் பெண்னின் திருமணத்திற்காக நகையை சேர்க்க முடியாதவர்கள் கூட இந்த பரிகாரத்தின் மூலம் பலன் அடைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்துவந்தால் நிச்சயம் உங்கள் வீட்டில் மேலும் மேலும் தங்கம் சேரும்.

Thulasi

தங்கத்தை அடமானம் வைக்காமல் இருக்க வேண்டுமென்றால், நம் வீடு வறுமையில் தள்ள படாமல் இருக்க வேண்டும். வறுமையில் தள்ள படாமலிருக்க கடுமையாக உழைக்க வேண்டும். கடுமையாக உழைத்தால் தான் வருமானம் இருக்கும், வருமானம் இருந்தால்தான் வறுமை இருக்காது, என்பதையும் நிச்சயம் நம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

Author: admin