விண்வெளிச் சுற்றுலாவில் புதிய சகாப்தம்..!

விண்வெளிச் சுற்றுலாவின் முதல்படியாக இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சன் உள்பட 6 பேர் புவிமண்டலத்திற்கு மேலே சுமார் 85 கிலோ மீட்டர் உயரம் பயணித்து பத்திரமாக பூமிக்குத் திரும்பியுள்ளனர்.
விண்வெளி சுற்றுலாவை மனதில் வைத்து சோதனை முயற்சியாக விர்ஜின் கேலக்டிக் நிறுவனத் தலைவர் ரிச்சர்டு பிரான்சன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் சிரிஷா பந்த்லா உள்ளிட்ட 6 பேர் விண்வெளிக்குப் பயணித்தனர். இதற்காக நியூ மெக்ஸிகோ பாலைவனத்தில் இருந்து யுனிட்டி 22 என்ற விண்கலத்தை இரட்டை விமானங்கள் சுமந்து கொண்டு சென்றன.
சுமார் 50 ஆயிரம் அடி உயரத்தை அடைந்ததும் அந்த இரட்டை விமானங்கள் யுனிட்டி 22 விண்கலத்தை கழற்றி விட்டன.
இதையடுத்து நெருப்புப் பறக்க சீறிப்பாய்ந்த யுனிட்டி விண்கலம் வளிமண்டலத்தைத் தாண்டிச் சென்றது. 60 நொடிகளில் யுனிட்டி 22 விண்கலம் சுமார் 2 லட்சத்து 95 ஆயிரம் அடி உயரத்தை அதாவது கிட்டத்தட்ட 90 கிலோ மீட்டர் உயரத்தை எட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டது. ஆனால் பிரான்சன் உள்ளிட்ட குழுவினர் 85 கிலோ மீட்டர் உயரம் வரை பயணித்தனர்.
புவியீர்ப்புப் பாதையைக் கடந்து விண்வெளியை அடைந்ததும், உடல் எடையற்ற தன்மையை அவர்கள் உணர்ந்தனர். அதன் பின்னர் 5 நிமிடங்கள் வரை பயணித்து பூமியின் அழகை ரசித்த பிரான்சன் குழுவினர் மீண்டும் பூமிக்குத் திரும்பினர். தாங்கள் புறப்பட்ட அதே நியூ மெக்ஸிகோ பாலைவனத்திலேயே அவர்கள் பத்திரமாக தரையிறங்கினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பிரான்சன், தங்கள் நிறுவனத்தின் 17 ஆண்டு கால உழைப்பிற்கு வெற்றி கிடைத்துள்ளதாக பெருமிதத்துடன் தெரிவித்தார்.
Author: admin