அபசகுனம் என்று எண்ணி இவர்களை நீங்கள் யாரும் இனி ஒதுக்காதீர்கள். ஏழேழு ஜென்மத்திற்கும் இந்த பாவம் பின் தொடரும்.

சிலர் மனதளவில் நல்ல குணம் படைத்தவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் குறை கூறும் அளவிற்கு எந்த விதமான தீய செயலிலும் ஈடுபடமாட்டார்கள். மற்றவர்களுக்கு உதவும் குணம் படைத்தவர்களாக கூட இருப்பார்கள். இப்படிப்பட்ட நல்ல மனிதருக்கான எல்லா நல்ல குணங்களையும் உள்ளடக்கியவர்களாக இருந்தாலும்கூட, சகுனம் என்று வந்துவிட்டால் அவர்களது குணம் தவறாக மாறிவிடுகிறது. எப்பேர்ப்பட்ட நல்ல குணங்களை கொண்டவர்கள் கூட இந்த சகுனத்தை ஏன் பார்க்கிறார்கள் என்பதுதான் நமக்கு புரியவில்லை. சகுனம் என்ற பெயரில் அடுத்தவர்கள் மனதை புண்படுத்துவது என்பது மிகவும் தவறான செயல். நம்மை அறிந்தோ அறியாமலோ நம்முடைய அன்றாட வாழ்வில் நாம் செய்யும் சில தவறுகளை பற்றி தான் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

widow

நம் சமூகத்தில் முதலாவதாக அபசகுனமாக கூறப்பட்டு ஒதுக்கி வைக்கப்படும் இடத்தில் இருப்பவர்கள் கைம்பெண்கள். இவர்களை விதவைகள் என்று கூறுவார்கள். காலமும் நேரமும் சூழ்நிலையும் ஒரு பெண்ணை இந்த நிலைமைக்கு ஆளாக்குகிறது. ஆனால் இதில் அந்தப் பெண் செய்த பாவம் தான் என்ன? அந்தப் பெண்ணை அமங்கலமானவள் என்று கூறி சில பேர் அவர்களது கையால் பூ வாங்குவதை கூட தவிர்த்துவிடுவார்கள். கோவில் வாசலில் பூ விற்கும் பெண் கைம் பெண்ணாக இருந்தால், அவர்களை விட்டு அடுத்த கடைக்கு பூ வாங்க சென்று விடுவார்கள். இது எவ்வளவு பெரிய பாவச்செயல் என்று சிலருக்கு இன்றளவும் புரிவதில்லை. அனைவரும் இந்த தவறை செய்கிறார்கள் என்பது கூற்று அல்ல. சிலர் செய்யும் தவறை சுட்டிக் காட்டத்தான் இந்த பதிவு. இப்படிபட்ட கைம் பெண்களிடமிருந்து பூவை வாங்கி சாமிக்கு செலுத்தக்கூடாது என்றும் அல்லது சுமங்கலிப்பெண்கள் கைம் பெண்களிடமிருந்து பெற்ற பூவினை தலையில் சூட்டிக் கொள்ளக் கூடாது என்றும் எந்த சாஸ்திரத்திலும் கூறப்படவில்லை.

கைம் பெண்களாக இருந்தாலும் அவர்களிடமிருந்து நாம் வாங்கிய பூவினை அந்த இறைவனுக்கும் சூட்டலாம். சுமங்கலிப் பெண்களும் சூடிக் கொள்ளலாம் என்பதுதான் உண்மை. நீங்கள் இந்தத் தவறை செய்பவர்களாக இருந்தால் இனி மாற்றிக்கொள்வது நல்லது.

mom-baby

இதேபோல் நல்ல காரியத்திற்கு செல்லும்போது சிலபேர் கைம்பெண்கள் எதிரே வந்தால், செல்லாமல் நின்று விட்டு உள்ளே வந்து தண்ணீர் அருந்தி விட்டு செல்வார்கள். இதுவும் தவறான ஒரு செயல் தான். அடுத்ததாக குழந்தை இல்லாதவர்கள், கணவனிடமிருந்து பிரிந்து வாழ்பவர்கள், நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் முதிர்கன்னிகளாக இருப்பவர்கள் இவர்களையெல்லாம் சுபவிசேஷங்களில் இருந்து தள்ளி வைப்பது தவறான செயல். இப்படிப்பட்ட பிரச்சனைகளை எல்லாம் இவர்கள் வேண்டி வர வைத்துக்கொள்வது இல்லை. அவர்களது பிறந்த நேரமும், காலமும், விதியும் சேர்ந்துதான் இவர்களை இப்படி மாற்றி விடுகிறது. இவர்கள் தொட்ட காரியம் துளங்காது என்று யாரும் நம்பிவிட வேண்டாம். இப்படிப்பட்டவர்களில் சிலர் மிகவும் அதிர்ஷ்ட சாலியாக இருப்பார்கள்.

widow1

சுபநிகழ்ச்சிகள் நடக்கும் சமயத்தில் இவர்களை ஒதுக்கி வைப்பதும், இவர்களது மனது நோகும் படி நடந்து கொள்வதும் ஒரு பாவச் செயலாக கருதப்படுகிறது. கைம் பெண்கள், குழந்தை வரம் இல்லாதவர்கள், கணவனை விட்டு சூழ்நிலை காரணமாக பிரிந்தவர்கள், முதிர்கன்னிகள் இவர்களது கண்களில் இருந்து கண்ணீர் வர ஒருபொழுதும் நாம் காரணமாக இருக்கக் கூடாது. இப்படி நாம் செய்யும் பாவமானது நம்மை ஏழேழு ஜென்மத்துக்கும் பின்தொடரும். பொது இடங்களில் மற்றவர்களுக்கு தரக்கூடிய மரியாதையை இவர்களுக்கும் தருவதுதான் நாகரீகம். சிலபேர் இவர்களிடமிருந்து ஆசிர்வாதம் கூட பெற்றுக் கொள்ள மாட்டார்கள். அபசகுனமாக நினைப்பார்கள். தெரிந்தோ தெரியாமலோ இவர்கள் எல்லாம் அபசகுனம் கொண்டவர்கள் என்ற நினைப்பை மனதில் வைத்திருப்பவர்கள் இனி உங்களது எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பதிவு. இனி இவர்களை சுப நிகழ்ச்சியில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டாம். இப்படிப்பட்ட பாவச் செயலை அறியாமலும் கூட இனி நீங்கள் செய்யாதீர்கள்.

Author: admin