சுற்றுலாவில் புதிய அத்தியாயம் – 5 பேருடன் பிரிட்டன் தொழிலதிபர் ரிச்சர்ட் விண்வெளி பயணம்

70 வயதான பிரிட்டனை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சன் நிறுவிய விண்வெளி சுற்றுலா நிறுவனமான விர்ஜின் கேலடிக்கின் ‘யூனிட்டி 22’ விண்கலத்தில் 5 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதில் பிரான்சன், கொலின் பென்னட், பெத் மோசஸ் மற்றும் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட சிரிஷா பாண்ட்லா என நான்கு பேர் பயணிகளாக சென்றுள்ளனர்.

சுற்றுலாதலங்கள் வரிசையில் விண்வெளியும் இணையும் காலம் வெகு அருகே வந்து விட்டது. ஆம். ஒரு வழியாக மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் சுற்றுலாவை தொடங்கிவிட்டார் பிரிட்டனை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சன். விர்ஜின் கேலக்டிக் என்ற பெயரில் விண்வெளி சுற்றுலா நிறுவனத்தை தொடங்கி, 3 முறை பரீட்சார்த்த முறையில் விண்வெளி சுற்றுலாவை நடத்தி காட்டினார் பிரான்சன்.

ஆனால், தற்போதோ, தனது நிறுவனத்தில் பணியாற்றும் மூன்று பேருடன் இணைந்து அவரும் விண்வெளி சுற்றுலாவுக்காக பறந்துள்ளார். கடந்த சில மாதங்கள் வரை விண்வெளிக்கு பறக்கும் திட்டம் அவரிடம் இல்லை. ஆனால், அவரது நிறுவனத்திற்கு போட்டியாக விண்வெளி சுற்றுலாவை தொடங்கியுள்ள அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ், வரும் 20 ஆம் தேதி பறக்கப் போவதாக அறிவித்திருந்தார். அதை தொடர்ந்தே, அவருக்கு முன்பாக விண்வெளிக்கு சென்று வந்துவிட வேண்டும் என்ற நோக்கில் பிரான்சன் பறந்துள்ளார்.

அமெரிக்காவின் நியூமெக்சிகோவில் உள்ள பாலைவனப் பகுதியில் இருந்து விர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தின் விஎஸ்எஸ் யூனிட்டி ராக்கெட் விமானம் மூலம் விண்வெளி சுற்றுலா பயணம் தொடங்கியது. பூமியில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவுக்கு இந்த விமானம் பறந்துள்ளது. விமானத்தில் இரு விமானிகள் மற்றும் பிரான்சன் உள்பட நான்கு பேர் என முழு பயணிகள் கொண்ட விண்வெளி பயணமாக இது அமைந்திருந்தது.

நியூமெக்சிகோவில் இருந்து புறப்பட்ட இந்த ராக்கெட் விமானம் செங்குத்தாக பறந்து மணிக்கு 15 கிலோ மீட்டர் தொலைவை எட்டியது. அதாவது பூமியில் இருந்து 50 ஆயிரம் அடி உயரத்தை எட்டியதும், மதர்ஷிப் என அழைக்கப்படும் ராக்கெட்டில் இருந்து விஎஸ்எஸ் யூனிட்டி என பெயரிடப்பட்ட விண்களம் பிரிந்தது. அந்த விண்கலம் நெருப்பு குழம்பை கக்கியபடி 80 கிலோமீட்டர் உயரத்தை அடைந்தது. அதன் பின் பத்திரமாக பூமிக்கு திரும்பியது.

அடுத்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 400 விண்வெளி பயணங்களை நடத்த பிரான்ஸன் திட்டமிட்டுள்ளார். ஹாலிவுட் பிரபலங்கள், பெரும் பணக்காரர்கள் என இதுவரை 600-க்கும் மேற்பட்டோர் விண்வெளி சுற்றுலாவுக்காக முன்பதிவு செய்துள்ளனர். விண்வெளிக்கு சென்றுவிட்டு பூமிக்கு திரும்பி வர ஒன்றரை மணி நேர பயணத்திற்கு இந்திய மதிப்பில் சுமார் ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படும் எனத் தெரிகிறது.

விண்வெளி சுற்றுலாத் தொழிலில் ப்ளூ ஆரிஜின் என்ற நிறுவனத்தை அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோசும், ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனத்தை பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கும் தொடங்கியுள்ளனர். இதில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வரும் செப்டம்பரில் தனது விண்கலத்தை செலுத்த உள்ளது.
வணிக ரீரதியாக விண்வெளிவிக்கு பயணம் மேற்கொள்ளவும், அதில் பயணிகளை அனுப்பவும் உலகின் பெரும் பணக்காரர்கள் போட்டா போட்டி வரும் நிலையில் ரிச்சர்ட் பிரான்சன் அதில் முந்தியுள்ளார்.
image


“விமானம் போல இந்த விண்வெளி பயணமும் எதிர்காலத்தில் அதிகரிக்கலாம்” என தெரிவித்துள்ளார் இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை. அதே போல மற்றொரு இந்திய விஞ்ஞானி நெல்லை முத்து இதனை வரவேற்றுள்ளார்.

Author: sivapriya