ராஜஸ்தான்: மின்னல் தாக்கி 7 குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழப்பு

ராஜஸ்தானில் மின்னல் தாக்கி ஒரே நாளில் 7 குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

தலைநகர் ஜெய்ப்பூரை அடுத்துள்ள ஆம்பர் கோட்டை அருகே மலைப்பகுதியில் சுற்றுலாப்பயணிகள் கூடியிருந்தபோது மின்னல் தாக்கியது. இதில் 11 பேர் உயிரிழந்தனர். இதேபோன்று கோடா, ஜலாவர், தோல்பூர் ஆகிய மாவட்டங்களிலும் மின்னல் பாய்ந்து 7 பேர் பலியாகியுள்ளனர். பல்வேறு இடங்களில் படுகாயமடைந்த 21 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், மின்னல் தாக்கி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார். மழைக்காலத்தில் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Author: sivapriya