ஆந்திரா: பேரனுக்கு திருமணம் செய்ய தனது 14 வயது பேத்தியை கடத்திய பாட்டி; போலீஸ் வலைவீச்சு

பேரனுக்கு திருமணம் முடிப்பதற்காக 14 வயது பேத்தியை கடத்திய பாட்டியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதியை அடுத்துள்ள திருச்சானூரை சேர்ந்த பாட்டி ஒருவர் தன்னுடைய மகள் வழி பேத்தியை மகன் வழி பேரனுக்கு திருமணம் செய்துவைக்க கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சானூரை சேர்ந்த வகுளம்மாவின் மகள் வழி பேத்தி ராசாத்தி (14) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). மைனர் பெண்ணான இவரை வகுளம்மாவின் மகன் வழி பேரனான முரளி கிருஷ்ணாவிற்கு திருமணம் செய்வதற்காக சிறுமி என்றும் பாராமல் தன்னுடைய சொந்த பேத்தியை நான்கு நாட்களுக்கு முன் ரகசியமாக கடத்திச் சென்றுவிட்டார் பாட்டி.

அப்போது முதல் அவருடைய மகன் ஆதிநாராயணன், மருமகள் லிங்கம்மா, பேரன் முரளி கிருஷ்ணா ஆகியோரையும் காணவில்லை. இதுதொடர்பாக கடத்தப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள திருச்சானூர் போலீசார் வகுளம்மா, கடத்தப்பட்ட சிறுமி , ஆதிநாராயணன், லிங்கம்மா, முரளி கிருஷ்ணன் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Author: sivapriya