விம்பிள்டனில் சாதித்த இந்திய வம்சாவளி அமெரிக்க இளைஞர் – சமீர் பானர்ஜியின் பின்னணி என்ன?

உலக டென்னிஸ் வரலாற்றில் எப்போதும் இந்தியர்களுக்கு தனி இடம் உண்டு ராமநாதன் கிருஷ்ணன் தொடங்கி, லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி, சானியா மிர்சா, ரோஹன் போபண்ணா என சாதித்தவர்கள் பலர். இப்போது அந்த வரிசையில் இணைந்திருக்கிறார் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 17 வயதான சமீர் பானர்ஜி. இவர் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஜூனியர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். இறுதிப்போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த விக்டர் லிலோவை எதிர்த்து சமீர் களமிறங்கினார். ஒரு மணி நேரம் 22 நிமிடங்கள் நடந்த இந்தப் போட்டியில் 7-5, 6-3 என்ற நேர் செட்களில் சமீர் பானர்ஜி வெற்றி பெற்று, கோப்பையை கைப்பற்றினார்.

image

யார் இந்த சமீர் பானர்ஜி? அவர் பின்னணி என்ன?

17 வயதாகும் சமீர் பானர்ஜி அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் இப்போது வசித்து வருகிறார். இந்த விம்பிள்டன் போட்டித் தொடரை தன்னுடைய பயிற்சியாளர் கார்லஸ் எஸ்டபன் இல்லாமலேயே எதிர்கொண்டார் சமீர் பானர்ஜி. விம்பிள்டன் தொடர் தொடங்குவதற்கு முன்பாக கார்லஸ் எஸ்டபனுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவரால் சமீருக்கு போட்டியின்போது பயிற்சியளிக்க முடியவில்லை. இதன் காரணமாக தன்னுடைய உறவுக்காரரான கனட் என்பவர் பயிற்சியாளராக சமீருடன் விம்பிள்டன் தொடரில் இணைந்தார்.

image

சமீரின் தந்தை குணால் இந்தியாவின் அசாம் மாநிலத்தில் பிறந்தவர். தாயாரான உஷா ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். 1980 இல் அமெரிக்காவில் குடியேறிய இருவரும், அங்கேயே திருமணம் செய்துக்கொண்டனர். சமீர் பானர்ஜி விம்பிள்டன் மட்டுமல்லாமல் பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரிலும் கலந்துக்கொண்டு ஜூனியர் பிரிவில் தோல்வியடைந்தார். இப்போது விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வென்ற சமீர் சிறிது காலம் ஓய்வு எடுத்து பொருளாதாரம் அல்லது அரசியில் அறிவியல் பாடப் பிரிவில் உயர் கல்வியை அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தொடர இருக்கிறார்.

image

இந்தியாவை பொறுத்தவரை 1954 இல் நடந்த விம்பிள்டன் ஜூனியர் பிரிவு போட்டியில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். அதன் பின்பு அவர் மகன் ரமேஷ் கிருஷ்ணன் 1970 இல் விம்பிள்டன் மற்றும் பிரெஞ்ச் ஓபன் ஜூனியர் பிரிவுப் போட்டியை வென்று சாம்பியனானார். அதேபோல 1990 இல் லியாண்டர் பயஸ் அமெரிக்க ஓபன் மற்றும் விம்பிள்டன் ஜூனியர் சாம்பியன்களாகி அசத்தினர். மேலும் ஆஸ்திரேலிய ஓபன் ஜூனியர் பிரிவில் இரண்டாம் இடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Author: sivapriya