•கிமு 587 – சாலமோனின் கோவில் இடிக்கப்பட்டதை அடுத்து, பாபிலோனின் எருசலேம் முற்றுகை முடிவுக்கு வந்தது.
•1174 – 1173-74 கிளர்ச்சியின் முக்கிய கிளர்ச்சியாளர் இசுக்காட்லாந்தின் முதலாம் வில்லியம் இங்கிலாந்தின் இரண்டாம் என்றியின் படையினரால் கைது செய்யப்பட்டார்.
•1249 – இசுக்கொட்லாந்தின் மன்னராக மூன்றாம் அலெக்சாந்தர் முடிசூடினார்.
•1643 – இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: இங்கிலாந்தில் என்றி வில்மட் பிரபுவின் முடியாட்சி சார்புப் படைகள் சேர் வில்லியம் வோலர் தலைமையிலான நாடாளுமன்ற சார்புப் படைகளைத் தோற்கடித்தனர்.
•1830 – வங்காள மறுமலர்ச்சிக்கு வித்திட்ட இசுக்கொட்டிசு சர்ச் கல்லூரி கொல்கத்தாவில் அலெக்சாண்டர் டஃப், இராசாராம் மோகன் ராய் ஆகியோரால் நிறுவப்பட்டது.
•1844 – இலங்கையில் காவற்துறை நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.
•1863 – நியூயார்க் நகரத்தில் அரசுக்கு எதிரான மூன்று நாள் கலவரங்கள் ஆரம்பமாயின. 120 பேர் கொல்லப்பட்டனர்.
•1869 – இந்துப் பிள்ளைகளின் கல்விக்கு ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையில் ஓர் ஆங்கிலப் பாடசாலையை நிறுவினார்.
•1878 – பெர்லின் உடன்பாட்டை அடுத்து ஐரோப்பிய நாடுகள் பால்கன் குடாவின் வரைபடத்தை மாற்றியமைத்தன. செர்பியா, மொண்டெனேகுரோ, உருமேனியா ஆகியன முழுமையாக உதுமானியப் பேரரசிடம் இருந்து விடுதலை அடைந்தன.
•1919 – பிரித்தானியாவின் வான்கப்பல் ஆர்34 அத்திலாந்திக்குப் பெருங்கடல் மேலாக 182 மணிநேரம் பறந்து தனது முதலாவது பயணத்தை முடித்துக் கொண்டு இங்கிலாந்தின் நோர்போக்கில் தரையிறங்கியது.
•1923 – லாஸ் ஏஞ்சலீசில் ஹாலிவுட்டின் மேல் உள்ள மலையில் “ஹாலிவுட் குறியீடு” அதிகாரபூர்வமாக எழுதப்பட்டது. ஆரம்பத்தில் இது “ஹாலிவுட்லாந்து” என எழுதப்பட்டாலும் பின்னர் 1949 இல் தற்போதைய பெயருக்கு மாற்றப்பட்டது.
•1930 – முதலாவது உலகக்கோப்பை காற்பந்து போட்டிகள் உருகுவையில் ஆரம்பமாயின. லூசியென் லோரென்ட் பிரான்சுக்காக மெக்சிகோவுக்கு எதிராக முதலாவது கோலைப் போட்டார்.
•1931 – காஷ்மீர், ஸ்ரீநகரில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 75 பேர் கொல்லப்பட்டனர்.
•1941 – இரண்டாம் உலகப் போர்: மொண்டெனேகுரோ மக்கள் அச்சு நாடுகளுக்கு எதிராகக் கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.