சுவையான சேமியா பிரியாணி இப்படி செய்து பாருங்க. இனி காலை உணவாக இதை அடிக்கடி செய்வீங்க

எப்போதும் காலை உணவு என்பது ஏதேனும் எளிமையான உணவாகத் தான் இருக்கும்.நேரம் அதிகம் செலவாகும் உணவுகளை எப்போதும் காலையில் சமைப்பதில்லை. பெரும்பாலும் இட்லி அல்லது தோசையே காலை உணவாக இருக்கும். ஆனால் இப்போது அதிக நேரம் செலவில்லாமல் பிரியாணி சுவையில் செய்யும் ஒரு எளிமையான உணவை எப்படி செய்வது என்பது பற்றி பார்ப்போம் வாருங்கள்.

semiya

தேவையான பொருட்கள்:

சேமியா – 1 பாக்கெட், பெரிய வெங்காயம் – 3, தக்காளி – 1, புதினா – சிறிதளவு , பச்சை மிளகாய் – 3, கொத்தமல்லி – சிறிதளவு, இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன், எண்ணெய் – 50 கிராம், நெய் – 1 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், தனி மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன், பிரிஞ்சி இலை – 1, பட்டை – ஒரு சிறிய துண்டு, ஏலக்காய் – 2, கிராம்பு – 2, சோம்பு – 1/2 ஸ்பூன், உப்பு – தேவையான அளவு

சேமியா பிரியாணி செய்முறை:

முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயை வைத்து கடாய் சிறிது சூடானதும் ஒரு பாக்கெட் சேமியாவை அதில் போட்டு மிதமான தீயில் நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். வறுத்த சேமியாவை ஒரு தட்டில் மாற்றிக் கொள்ள வேண்டும்.

semiya

பின்னர் கடாயில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து அதனுடன் 50 கிராம் சமையல் எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் சோம்பு, பட்டை, பிரிஞ்சி இலை, ஏலக்காய், கிராம்பு போன்றவற்றை சேர்க்க வேண்டும். இவை நன்கு பொரிந்ததும் நீளவாக்கில் அரிந்து வைத்துள்ள வெங்காயத்தை அதில் சேர்க்கவேண்டும். வெங்காயம் நன்றாக பொன்னிறமாக மாறும் வரை வதக்க வேண்டும். பின்னர் அதனுடன் இரண்டு ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

வெங்காயமும் இஞ்சி, பூண்டு விழுதும் நன்றாக சேர்ந்து வதங்கி ஒன்று சேர்ந்து வந்த உடன் வெட்டி வைத்த தக்காளி மற்றும் பச்சை மிளகாயை அதனுடன் சேர்க்க வேண்டும். சிறிது நேரத்திற்கு பிறகு இதனுடன் கொத்தமல்லி மற்றும் புதினாவை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அவற்றுடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும். சேர்த்த பொருட்கள் அனைத்தும் நன்றாக வதங்கியதும் அதனுடன் ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளற வேண்டும். இவற்றுடன் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பையும் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

semiya

தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் வறுத்து வைத்த சேமியாவை அதனுடன் சேர்க்க வேண்டும். சிறிது நேரம் வேகமாக கொதித்ததும் கடாயின் மீது ஒரு தட்டை போட்டு மூடி அடுப்பை சிறிய தீயில் வைத்து 3 நிமிடங்கள் அப்படியே வேகவிட வேண்டும். மூன்று நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து சிறிது நேரம் அப்படியே வைக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து தட்டைத் திறந்து அதன்மீது சிறிதளவு கொத்தமல்லி இலை, அரை ஸ்பூன் நெய் சேர்த்து கிளறி பரிமாறி கொடுத்தால் அனைவர் வாயிலும் இந்த சுவை அப்படியே பிரியாணி சாப்பிடும் சுவையை கொடுக்கும். இந்த சேமியா பிரியாணியை உடனே முயற்சி செய்து பாருங்கள்.

Author: admin