உங்கள் குழந்தைகள் காய் கறிகளை சாப்பிடுவதே இல்லையா? கவலையை விடுங்கள், இது போல செய்து கொடுங்கள் பிறகு பாருங்கள் தினமும் கேட்பார்கள்.

இப்பொழுது கொரோனா லாக்டௌன் காரணமாக குழந்தைகள் வீட்டிலேயேதான் இருக்கின்றனர். எனவே தினமும் ஏதேனும் ஒருஸ்நாக் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. மாலை நேரங்களில் குழந்தைகள் ஏதேனும் சாப்பிட கேட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு பிடித்ததுபோல் ஆரோக்கியம் நிறைந்த உணவு பொருளை சமைத்துக் கொடுப்பதன் மூலம் அவர்களின் ஆரோக்கியமும் மேம்படும் ஸ்நாக்சும் சாப்பிட்டது போல இருக்கும். அப்படி குழந்தைகளுக்கு பிடிக்கக்கூடிய ஒரு ஸ்நாக் வகையான வெஜிடபிள் பிரெட் மசாலாவை எப்படி செய்வது என்று தான் இங்கு பார்க்கப் போகிறீர்கள்.

bread

வெஜிடபிள் பிரெட் மசாலா செய்யத் தேவையான பொருட்கள்:

கோதுமை பிரெட் – 1 பாக்கெட், பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 1, கேரட் – 1, பீன்ஸ் – சிறிதளவு, கோஸ் – சிறிதளவு, குடைமிளகாய் – 1, மிளகாய்த்தூள் – சிறிதளவு, மஞ்சள் தூள் – சிறிதளவு, மிளகுத்தூள் – சிறிதளவு, சீரகம் – அரை ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – தேவையான அளவு, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி.

முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயை வைக்கவேண்டும். கடாய் நன்றாக சூடானதும் அதில் 4 அல்லது 5 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதனுடன் சிறிதளவு சீரகம் சேர்க்கவேண்டும். அதன் பின்னர் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். சிறிது நேரத்தில் வெங்காயத்துடன் நறுக்கி வைத்த கேரட், பீன்ஸ், கோஸ், குடமிளகாய் ஆகிய காய்கறிகளை சேர்க்க வேண்டும். இவை சிறிதளவு வதங்கியதும் இதனுடன் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். பின்னர் சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும். தண்ணீர் எதுவும் சேர்க்காமல் ஒரு மூடி போட்டு காய்கறிகள் எண்ணெயிலேயே சிறிது நேரம் வதங்க வேண்டும். அடிபிடிப்பது போல இருந்தால் மிக மிக குறைந்த அளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். அடுப்பை சிம்மில் வைத்து தான் இதை செய்ய வேண்டும்.

masala

அதிக அளவு தண்ணீர் சேர்த்து வதக்கினோம் என்றால் அது ஒரு தொக்கு பதத்திற்கு வந்துவிடும். அதனால் முடிந்த அளவு தண்ணீர் சேர்க்காமல் அப்படியே தான் வதக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து மூடியை திறந்து அதனுடன் சிறிதளவு மிளகாய்த்தூள், சிறிதளவு மிளகுத் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும். மிளகாய்த்தூள் காய்கறிகளுடன் சேர்ந்து நன்றாக வதங்கும் வரை கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். மிளகாய்த்தூள் வாசனை மறைந்தது நன்றாக மசாலா வாசனை வந்தவுடன் இந்தக்கலவையை இறக்கி வைத்து அதன் மீது கொத்தமல்லி இலைகளை தூவி விட வேண்டும்.

அதன் பிறகு தோசைக்கல்லை அடுப்பின் மீது வைத்து தோசைக்கல் சூடானதும் சிறிதளவு எண்ணெய் சேர்த்து அதில் கோதுமை ப்ரெட் அல்லது மைதா மாவு பிரெட் இவற்றில் ஏதேனும் ஒன்றினை எடுத்துக்கொண்டு அதிலிருந்து இரண்டு இரண்டு துண்டுகளாக எடுத்து தோசைக்கல்லில் வைத்து பொன்னிறமாக மாறும் வரை பொறிக்க வேண்டும். பிரட்டின் இரண்டு புறங்களும் பொன்னிறமாக வருமாறு பொரித்தெடுக்க வேண்டும்.

bread

பொரித்தெடுத்த பிரட்டின் மீது நாம் செய்த வெஜிடபிள் மசாலா கலவையை வைத்து அதன் மீது மற்றுமொரு பிரட்டை வைக்க வேண்டும். இப்போது தயாரான இந்த வெஜிடபிள் பிரெட் மசாலாவை குழந்தைகளுக்கு சாப்பிடக் கொடுக்கலாம்.

காய்கறிகளை தனியாக செய்து கொடுத்தால் குழந்தைகள் விருப்பமாக சாப்பிடுவதில்லை. இவ்வாறு செய்து பிரெட் உடன் சேர்த்துக் கொடுக்கும் பொழுது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அதோடு காய்கறிகளின் ஊட்டச்சத்தும் அவர்களுக்கு முழுவதுமாக கிடைக்கும். இந்த அசத்தலான, ஆரோக்கியமான வெஜிடபிள் பிரெட் மசாலாவை இன்றே உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள்.

Author: admin