கோவை: வேனை விற்பதாக கேரள இளைஞரை வரவழைத்து கடத்தி ரூ. 3.60 லட்சம் கொள்ளை – 7 பேர் கைது

நான்கு சக்கர வாகனத்தை விற்பதாக கூறி கேரள இளைஞரை வரவழைத்து கடத்தி சென்று பணம், மொபைல் போனை கொள்ளையடித்த 7 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கேரளா மாநிலம் எர்ணாக்குளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுஜித் (41). தனியார் கொரியர் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர், வேன் ஒன்றை சொந்தமாக வாங்குவதற்காக ஓ.எல்.எக்ஸ், குயிக்கர் உள்ளிட்ட இணையத்தளங்களில் பார்த்து வந்துள்ளார். அதில், ஒ.எல்.எக்ஸ் இணையத்தளம் மூலம் சாஜின் என்பவர் தன்னிடம் உள்ள வேனை விற்பனை செய்வதாக கூறி கோவைக்கு வருமாறு அழைத்துள்ளார்.

இதையடுத்து வேனை வாங்குவதற்காக கடந்த 7ஆம் தேதி சுஜித் தனது நண்பர்களான சுனில் (53), ராபின் (32), விஜித் (26), ராஜேஸ் (46), ஆகியோருடன் கோவை ஒத்தக்கால்மண்டபம் பகுதிக்கு வாடகை காரில் வந்துள்ளனர். அப்போது அங்கு ஆட்டோவில் வந்த 3 பேர் சுஜித், மற்றும் சுனில் ஆகிய இருவரை மட்டும் வாடகைக் காரில் போடிபாளையம் பகுதிக்கு அழைத்துச் சென்று ஒரு வேனை காண்பித்துள்ளனர்.

image

பின்னர், மதுக்கரை அருகே உள்ள வாடகை வீட்டிற்கு இருவரையும் அழைத்துச் சென்ற அந்த கும்பல், அங்கிருந்த மேலும் சிலருடன் சேர்ந்து கொண்டு சுஜித் மற்றும் சுனிலை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் அவர்கள் வேன் வாங்க வைத்திருந்த ரூபாய் 3 லட்சத்து 16 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு, சுனில் வைத்திருந்த ஏ.டி.எம் கார்டை வாங்கிச் சென்று அதிலிருந்து ரூ.45 ஆயிரம் பணத்தை எடுத்துள்ளனர்.

மேலும் அவர்களிடமிருந்த செல்போன்கள், வாட்ச் ஆகியவற்றை பறித்துக் கொண்டு, இருவரையும் ஆடையில்லாமல் புகைப்படம் எடுத்துக் கொண்டு, இதுகுறித்து வெளியே சொன்னால் புகைப்படங்களை இணைய தளங்களில் பகிர்ந்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது. பின்னர், இருவரையும் கொச்சின் நெடுஞ்சாலையில் இறக்கி விட்டு வாடகைக் காருடன் தப்பிச் சென்றனர். இதையடுத்து இருவரும் வாடகை ஆட்டோ பிடித்து தனது மற்ற நண்பர்கள் இருந்த இடத்துக்கு சென்றுள்ளனர். அங்கிருந்து செட்டிபாளையம் காவல் நிலையம் சென்று புகார் அளித்தனர்.

வழக்கை விசாரித்த காவல்துறையினர், மதுக்கரை காவல் நிலையத்திற்கு வழக்கை மாற்றினர். சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து விசாரிக்கப்பட்டு வந்தது. முதல் கட்ட விசாரணையில் சம்பவத்தில் தொடர்புடைய கரூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்கிற ஐயப்பன் (35) என்பவரை கைது செய்தனர். அவரை வைத்து கேரளாவில் பதுங்கி இருந்த பாலக்காட்டை சேர்ந்த சாஜன் (26), அஜித் (19), மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த முகமது சலீம் (22), அஜ்மல் கான் (29), அன்சார் (30), ராஜேஷ் (29), ஆகிய 7 பேரை தனிப்படை போலீசார் கேரளாவில் வைத்து கைது செய்து விசாரணைக்கு பின் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Author: sivapriya