குளிக்கும் பொழுது தண்ணீரை முதலில் எங்கு ஊற்றிக் கொள்ள வேண்டும் தெரியுமா? உச்சந்தலையா? உள்ளங்காலா? இந்த குழப்பம் தீரனுமா? குளிக்கும் போது முக்கியாமாக செய்ய வேண்டியவை! செய்யவே கூடாதவை எவை?

சாஸ்திர ரீதியாக ஸ்நானம் செய்யும் பொழுது நாம் செய்ய வேண்டிய சில விஷயங்களை செய்யும் பொழுது நமக்கு நிறைய நன்மைகள் உண்டாகும் என்பது நியதி. எந்த திசையில் நின்று குளிக்க வேண்டும்? என்பதற்குக் கூட சாஸ்திரங்கள் உண்டு. அந்த வகையில் குளிக்கும் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன? என்று தெரிந்து வைத்துக் கொண்டிருப்பது நல்லது. குளிக்கும் முன்னர் ஒரு குவளையில் தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள்.

om-mantra

பின்னர் அதில் ‘ஓம்’ என்னும் மந்திரத்தை எழுதி இறைவனிடம் எனக்குள் நீங்கள் வந்து, உங்களுக்கு செய்யும் அபிஷேகமாக இந்த நீரை எடுத்துக் கொள்ளுங்கள் என்று வேண்டி தியானம் செய்து பின் தண்ணீரை ஊற்றிக் கொள்ள வேண்டும் என்கிறது சாஸ்திரம். இதனால் தியானம் செய்த பலனும், அபிஷேகம் செய்த பலனும் உண்டாகும். இப்படி குளியல் சம்பந்தப்பட்ட சாஸ்திர விஷயங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

குளிக்கும் பொழுது அதை நாம் கங்கையில் ஸ்நானம் செய்வதாகவே நினைத்து பாவங்களைப் போக்குமாறு வேண்டிக் கொண்டே குளிக்கலாம். சாதாரண தண்ணீர் புனிதமாக மாற தண்ணீரில் ‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரத்தை எழுத வேண்டும். எப்பொழுதும் வடக்கு மற்றும் கிழக்கு திசையில் நின்று தான் குளிக்க வேண்டும். மேற்கு அல்லது தெற்கு திசையை நோக்கி குளிக்கக்கூடாது. மயானத்திற்கு சென்று வருபவர்கள், கர்ம காரியங்களை செய்துவிட்டு வருபவர்கள் ஆகியோர் மட்டும் தெற்கு திசையில் நின்று குளிக்கலாம். மேற்கு திசையில் நின்று குளிக்கும் பொழுது தேவையில்லாத நோய்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது.

bathroom-shower

குளியலின் பொழுது எப்பொழுதும் உச்சந்தலையில் முதலில் தண்ணீர் ஊற்ற வேண்டுமா? அல்லது உள்ளங்காலில் முதலில் தண்ணீர் ஊற்ற வேண்டுமா? என்கிற சந்தேகம் பலருக்கும் உண்டு. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான விஷயங்களை கூறுவதால் வரும் குழப்பம் இது. நெருப்பு எப்பொழுதும் மேல் நோக்கியே பயணிக்கும் என்பது அனைவரும் அறிந்தது தான். எனவே அக்னியானது காலிலிருந்து உச்சந்தலையை நோக்கி பிரவேசிக்கும். ஆகவே முதலில் தண்ணீரை உள்ளங்காலில் நீங்கள் ஊற்றுவது தான் சரியானது. உள்ளங்கால் முதல் ஒவ்வொரு பாகமாக வந்த பின்னர் கடைசியாக தான் உச்சந்தலையில் தண்ணீரை ஊற்றிக் கொள்ள வேண்டும். அப்போது தான் கீழே இருந்து குளிர்ச்சியானது பரவி மேல்நோக்கி தலை வழியே செல்லும்.

குளித்து முடித்த பின்பு முதலில் முதுகை தான் துடைக்க வேண்டும் என்று கூறுவார்கள். முதுகு என்பது நம் உடல் அங்கங்களில் மிகவும் பெரிய பாகமாக இருக்கின்றது. அந்த இடத்தில் தான் உஷ்ணத்தின் வேகம் அதிகமாக பரவும். இந்த காரணத்தினால் தான் முதலில் முதுகை துவட்டி விட்டு பின்னர் தான் உடம்பை துடைக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. தண்ணீர் இல்லாமல் எந்த ஒரு உயிரும் உயிர் வாழ முடியாது. எனவே தண்ணீருக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அதில் காரி உமிழ்வது, துப்புவது போன்ற செயல்களை செய்யக்கூடாது. அது போல் தண்ணீரை வீணாக விரயம் செய்யக்கூடாது. அவசியத்திற்கு மட்டுமே நீரைப் பயன்படுத்த வேண்டும்.

salt-water-bath

தண்ணீரில் சிறிதளவு கல் உப்பு போட்டு குளித்தால் திருஷ்டி தோஷங்கள் அறுக்கப்பட்டு, எதிர்மறை ஆற்றல்கள் உடலை விட்டு நீங்கும். தண்ணீரில் நாராயணன் வாசம் செய்வதாக ஐதீகம் உண்டு. எனவே ஆற்றில் குளிப்பவர்கள் தண்ணீரை தலையில் தெளித்து விட்டு, பின்னர் மெதுவாக இறங்கி சென்று தான் முறையாக குளிக்க வேண்டும். ஓடி சென்று குதிக்க கூடாது. குளிக்க ஆரம்பிக்கும் பொழுது வாயில் தண்ணீரை நிரப்பிக் கொண்டு, குளித்து முடித்த பின் அதனை துப்பிவிட்டால் கழுத்துக்கு மேலே இருக்கும் நீர் சம்பந்தமான கட்டுகள், நோய்கள் ஆகியவை அகலும்.

Author: admin