கல்யாண பந்தியில் வைக்கும் ரசம் சுவையாக இருப்பதற்கு காரணம் என்ன? அந்த ரகசிய டிப்ஸை நாமும் தெரிந்து கொள்வோமா?

பெரும்பாலும் ஹோட்டலில் கொடுக்கும் ரசமும், கல்யாண பந்தியில் ஊற்றக்கூடிய ரசத்திற்கும் சுவை கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்கும். என்னதான் பார்த்து பார்த்து நம்முடைய வீட்டில் ரசம் வைத்தாலும் அந்த ரசம் பந்தியில் ஊற்றும் ரசத்திற்கு ஈடாகாது. பின்வரும் குறிப்பை பின்பற்றி உங்களுடைய வீட்டில் ஒரே ஒருமுறை ரசம் வைத்துப் பாருங்கள். பந்தியில் வைக்கும் ரசத்திற்கும், உங்கள் வீட்டில் வைக்கும் ரசத்திற்கும் ஒரு துளி அளவும் வித்யாசம் கண்டுபிடிக்கவே முடியாது. கல்யாண வீட்டு ரசம் எப்படி வைப்பது தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

rasam1

முதலில் 50 கிராம் அளவு துவரம் பருப்பை எடுத்து கழுவி குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 3 விசில் வைத்துக் கொள்ள வேண்டும். பருப்பு வெந்தவுடன் பருப்பில் இரண்டு டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி விடுங்கள். பருப்பை 10 நிமிடம் அப்படியே வைத்தால், தண்ணீர் மட்டும் தெளிந்து இருக்கும். பருப்பில் இருந்து தண்ணீரை மட்டும் எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். மீதம் இருக்கும் பருப்பை சாம்பாருக்கு அல்லது மற்ற பயன்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். (பருப்புத் தண்ணீர் 2 டம்ளர் மட்டும்தான் ரசத்துக்கு தேவை.)

இரண்டாவதாக ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் மிளகு 1 – ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன் சேர்த்து முதலில் கொரகொரப்பாக ஒட்டிக்கொள்ள வேண்டும். அதே மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் மிளகு சீரகத்துடன் 10 பல் பூண்டை சேர்த்து மீண்டும் ஒருமுறை பல்ஸ் பட்டனில் வைத்து, கொரகொரப்பாக ஒட்டி வைத்துக் கொள்ளுங்கள். மிளகு சீரகம் பூண்டு சேர்த்த கலவை தயார். இதுவும் அப்படியே இருக்கட்டும்.

rasam3

அடுத்தபடியாக ஒரு சிறிய கிண்ணத்தில் பழுத்த 2 பெரிய சைஸ் தக்காளியை போட்டு உங்கள் கையாலேயே அந்த தக்காளியை மசித்து கரைத்து வைத்துக் கொள்ளவேண்டும். மிக்ஸியில் போட்டு அடிக்கக்கூடாது.

அடுத்து எலுமிச்சம்பழம் அளவு புளியை தண்ணீரில் ஊறவைத்து 2 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி, புளி கரைசலை கரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் புளிக்கரைசலில் தான் தேவையான அளவு உப்பை போடவேண்டும். கொத்தமல்லி தழைகளை பொடியாக நறுக்கி புளி கரைசலில் சேர்த்து வைத்து விடுங்கள். இதுவும் அப்படியே இருக்கட்டும்.

puli1

இப்போது ரசம் தாளிக்க செல்லலாம். அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளுங்கள். எண்ணெய் ஒரு ஸ்பூன் அளவு ஊற்றி காய்ந்ததும், கடுகு – 1 ஸ்பூன், வெந்தயம் – 1/4 ஸ்பூன், பெருங்காயம் – 1/4 ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, பச்சை மிளகாய் – 2, கறிவேப்பிலை – 2 கொத்து சேர்த்து தாளித்து அடுத்தபடியாக கரைத்து வைத்திருக்கும் தக்காளி கரைசலை கடாயில் ஊற்ற வேண்டும்.

rasam4

இந்த தக்காளி கரைசலுடன் சாம்பார் பொடி 1 ஸ்பூன், ரசப் பொடி – 2 ஸ்பூன், மஞ்சள் பொடி – 1/2 ஸ்பூன், சேர்த்து ஒரு நிமிடம் போல வதக்கி விட்டால் போதும். (கடையில் விற்கும் சாம்பார் பொடி, கடையில் விற்கும் ரச பொடி தான் இதில் சேர்க்க வேண்டும்.) தக்காளியின் பச்சை வாடை நீங்கியதும் கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசலை கடையில் சேர்த்து கொள்ளுங்கள்.

mysore-rasam

புளிக்கரைசல் ஊற்றிய பின்பு, மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் மிளகு சீரகம் பூண்டு பொடியை புளி கரைசலுடன் சேர்த்து, ரசத்தை ஒரு முறை நன்றாக கலந்து விடுங்கள். கடாயில் இருக்கும் ரசம் ஒரு கொதி வந்தவுடன் தயாராக எடுத்து வைத்திருக்கும் பருப்பு தண்ணீரை கடாயில் ஊற்றி மீண்டும் ஒருமுறை நன்றாக கலந்துவிட்டு, ரசம் கொதித்து நுரை கட்டி வந்தவுடன், கரடிகை விட்டு மீண்டும் ஒருமுறை கலந்து விட்டு, ரசம் இரண்டு கொதி வந்தவுடன், அடுப்பை அணைத்து விடுங்கள். இறுதியாக கொஞ்சம் கொத்தமல்லி தழை, வெல்லம் 1/2 ஸ்பூன் சேர்த்து கலந்துவிட்டு பரிமாறினால் சுவையான கல்யாண பந்தி ரசம் தயார்.

milagu-rasam

பின் குறிப்பு: மேலே கொடுக்கப்பட்டிருக்கும் இந்த அளவுகளுடன் ரசம் வைத்தால் 6 முதல் 7 பேர் வரை சாப்பிடலாம். ரசத்திற்கு புளிக்கரைசல் கொஞ்சம் தூக்கலாக இருக்கவேண்டும். 2 பெரிய டம்ளர் அளவு பருப்பு தண்ணீர் எடுத்து இருக்கின்றோம். 2 டம்ளர் அளவு புளிக்கரைசல் எடுத்து இருக்கின்றோம். தேவைப்பட்டால் இன்னும் 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றலாம். அதற்கு மேலே தண்ணீரை ஊற்றக்கூடாது.

Author: admin