ஆக.31-ல் படைகள் வாபஸ்: ஆப்கனிலிருந்து தாயகம் திரும்பினார் அமெரிக்க ராணுவ ஜெனரல்

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் திரும்பப் பெறப்பட உள்ள நிலையில், முதலாவதாக நாடு திரும்பிய ராணுவ ஜெனரல் ஆஸ்டின் எஸ் மில்லருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

2001ஆம் ஆண்டு அல் கய்தா இயக்கத்தினர் நியூயார்க்கில் நடத்திய இரட்டை கோபுரத் தாக்குதல் உலகையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதன் பின் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்தை அடக்குவதற்காக எனக் கூறி அமெரிக்க படைகள் அங்கு களமிறக்கப்பட்டன. கடந்த 20 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடன் நடந்த மோதலில் 2,400 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பல ஆயிரம் பேர் காயமடைந்தனர். பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களையும் அமெரிக்கா செலவழிக்க நேர்ந்தது.

Fmr top US general in Afghanistan gets 'well done' upon return, as Taliban  take key border post with Pakistan | Fox News

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்த தங்கள் படைகள் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் வாபஸ் பெறப்படுவதாக அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இதன் தொடக்கமாக ஆப்கானிஸ்தானில் படைகளை முன்னின்று வழி நடத்தி வந்த அமெரிக்க ராணுவ ஜெனரல் ஆஸ்டின் எஸ் மில்லர் தாயகம் திரும்பியுள்ளார். மேரிலாந்தில் உள்ள விமானப்படைத்தளத்திற்கு வந்த ஜெனரல் ஆஸ்டின் எஸ் மில்லருக்கு அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின், முப்படைகளின் தலைவர் மார்க் மில்லி ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.

இதற்கிடையில், அமெரிக்க படைகள் தாயகம் திரும்பும் நிலையில், ஆப்கானிஸ்தானில் மேலும் பல பகுதிகளை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து கொண்டுள்ளனர்.

Author: sivapriya