அடுத்தடுத்து திருமணம்; நகை, பணத்துடன் எஸ்கேப் – கணவர்களுக்கு ஷாக் கொடுத்த ஆந்திர பெண்


ஆந்திராவில் மூன்று நபர்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டு பணம் மற்றும் நகையுடன் தப்பியோடிய சுஹாசினி என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் விஜயபுரம் மண்டலத்தைச் சேர்ந்த சுனில் என்பவர் மார்க்கெட்டிங் வேலை செய்து வருகிறார். திருப்பதியில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் பணிபுரியும் சுஹாசினி என்பவர் சுனிலுக்கு அறிமுகமாகி இருக்கிறார். இந்த அறிமுகம் காதலாக மாறியதால் அவர்கள் இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு முன்பு சுனிலிடம் ரூ. 2 லட்சம் பெற்றுள்ளார் சுஹாசினி. திருமணத்திற்குப் பிறகு, தான் அனாதை என்றும் தனது சிறுவயதில் இருந்து வளர்த்த தாய்மாமாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டுமெனவும் கூறி சுனிலின் தந்தையிடம் இருந்தும் மேலும் ரூ. 2 லட்சம் பணத்தை சுஹாசினி பெற்றுக்கொண்டார்.

image

தந்தையிடம் பணம் பெற்றது குறித்து சுனிலுக்கு தெரியவந்ததால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதையடுத்து சுஹாசினி வீட்டில் இருந்த பணம், நகைகளை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். வீட்டை விட்டு வெளியேறிய பிறகு அவரது அறையில் கிடைத்த ஆதார் அட்டையை வைத்து அதிலுள்ள முகவரிக்குச் சென்று பார்த்தபோது ஏற்கனவே நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொண்டு அவர்களுக்கு ஒரு மகள் இருப்பது தெரியவந்தது.

image

இதனால் சுஹாசினியால் தான் ஏமாற்றப்பட்டதாக சுனில் திருப்பதி அலிபிரி போலீசில் மார்ச் 3 ம் தேதி புகார் செய்தார். இதையடுத்து தப்பிச்சென்ற சுஹாசினியை அலிபிரி போலீசார் வழக்கு பதிவுசெய்து தேடி வந்தனர். இதற்கிடையே சுஹாசினி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தன்னையும் திருமணம் செய்து ஏமாற்றியதாக இரண்டாவது கணவரான வினய் போலீசில் புகார் அளித்தார்.

இந்நிலையில் திருப்பதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் வந்த சுஹாசினியை இன்று திருப்பதியில் விவேகானந்தா சந்திப்பு அருகே போலீசார் கைது செய்தனர். விசாரணையில் தனது தாய்மாமா உதவியுடன்தான் சுஹாசினி மேலும் மேலும் திருமணம் செய்து அவர்களிடமிருந்து பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்ததாகக் கூறியுள்ளார். மேலும், தாய்மாமாதான் சுஹாசினியின் முதல் கணவர் என்ற தகவலும் விசாரணையில் தெரியவந்தது அடுத்தடுத்த கணவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

Author: sivapriya