ஆவடி: திருமண ஆசைகாட்டி சிறுமியை கடத்திச் சென்ற கூலித் தொழிலாளி போக்சோவில் கைது

திருமண ஆசைகாட்டி சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த நபரை கைது செய்த போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

ஆவடியை அடுத்துள்ள அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வரும் தம்பதிக்கு 15 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில், கடந்த 1-ந் தேதி வீட்டிலிருந்து கடைக்குச் சென்ற சிறுமி வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து, பெற்றோர் பல்வேறு இடங்களிலும் சிறுமியை தேடியும், சிறுமியை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

image

இதையடுத்து பெற்றோர் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில், செங்குன்றம் நல்லூர்அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வெங்கடேசன் (32) என்ற கூலித்தொழிலாளி சிறுமியை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் தனிப்படை அமைத்து சிறுமியை கடத்திய வெங்கடேசனை தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று மதியம் தலைமறைவாக இருந்த வெங்கடேசனை சுற்றிவளைத்து பிடித்த போலீசார், அவரிடம் இருந்து சிறுமியை மீட்டனர். பின்னர், இருவரையும் திருமுல்லைவாயல் காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், சிறுமியை திருமண ஆசை வார்த்தை கூறி வெங்கடேசன் கடத்தி சென்று, செங்குன்றத்தில் ஒரு வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து, போலீசார் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பின்னர் வெங்கடேசனை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார், அவரை திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Author: sivapriya