அடுத்தடுத்து ஏமாற்றி 4 திருமணம்: அமைச்சர்களை உறவினர்கள் எனக் கூறி மோசடி செய்த பெண் கைது

ராமநாதபுரத்தில் 4 திருமணம் செய்து ஏமாற்றியதோடு, முன்னாள்-இன்னாள் அமைச்சர்களை உறவினர்கள் எனக் கூறி பண மோசடி செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

கரூரைச் சேர்ந்த சவுமியா என்பவர், கணவரை பிரிந்து அரியலூரை சேர்ந்த சக்தி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். அதை மறைத்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த பட்டாலியன் காவல்துறை பிரிவைச் சேர்ந்த காவலர் சுரேஷை மூன்றாவதாக திருமணம் செய்துள்ளார். அப்போது அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி சிறுவயல் பகுதியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட குடும்பத்திடம் பல லட்சம் ரூபாய் பணம், 64 சவரன் தங்க நகைகளை மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.

பண பரிவர்த்தனைக்கு காவலர் சுரேஷின் வங்கிக் கணக்கை பயன்படுத்தி வந்த சவுமியா, பின்னர் அங்கிருந்து தலைமறைவாகி சேலத்தில் சீனிவாசன் என்பவரை 4-வதாக திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.

இதனிடையே, பணத்தை இழந்தவர்கள் சவுமியா குறித்து ராமநாதபுரம் காவல்துறையில் புகார் அளித்தனர். அதில், அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் திமுக அமைச்சரின் புகைப்படங்களை வீட்டில் ஃபிரேம் போட்டு மாட்டிவைத்து, அவர்கள் தமது உறவினர்கள் என சவுமியா கூறியதால், அரசு வேலை கிடைக்கும் என நம்பி பணம் கொடுத்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்து இருந்தனர்.

இதையடுத்து, சேலத்தில் இருந்த சவுமியாவையும் அவருக்கு உதவியாக இருந்த சதீஷ் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Author: sivapriya