“நாங்க செண்ட்ரல் போலீஸ்”, நூதன கொள்ளை நடத்திய ஈரானிய கும்பல்..!

சென்னையில் குடும்பத்துடன் தங்கியிருந்து, மத்திய காவல்துறையினர் எனக் கூறி நூதன முறையில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 3 ஈரானியர்கள் அடங்கிய 6 பேர் கொண்ட கொள்ளை கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். 
சோமாலியா நாட்டை சேர்ந்த 61 வயதான அலி முகம்மது என்பவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கண் சிகிச்சை பெறுவதற்காக வந்து விடுதி ஒன்றில் அறையெடுத்து தங்கி இருந்துள்ளார். சென்னையில் வழிகாட்டியாக செயல்பட்ட அப்துல் என்பவருடன் அலி நுங்கம்பாக்கம் மருத்துவமனைக்கு சென்று விட்டு மாடல் பள்ளி சாலை வழியாக மீண்டும் அறைக்குச் சென்றுள்ளார். அப்போது இரண்டு கார்களில் வந்த 3 பேர், அலியை திடீரென வழிமறித்து மத்திய காவல்துறையினர் எனக்கூறி, பாஸ்போர்ட் உட்பட அவரது உடமைகளை சோதனை செய்ய வேண்டும் கேட்டுள்ளனர்.
அலி முகம்மது ஆவணங்களோடு, தனது பர்சையும் எடுத்தபோது, கண்ணிமைக்கும் நேரத்தில் அதிலிருந்த 3 ஆயிரத்து 800 அமெரிக்க டாலர்களைப் பறித்துக் கொண்டு அந்த கும்பல் தப்பித்துள்ளது. அதிர்ச்சியும் வேதனையுமாக ஆயிரம் விளக்கு போலீசாரிடம் சென்று புகாரளித்துள்ளார் அலி முகம்மது. உடனடியாக களத்தில் இறங்கிய போலீசார், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். கொள்ளை கும்பல், பயணித்த வழிநெடுகிலும் உள்ள சுமார் 200 சிசிடிவி கேமராக்களை பின் தொடர்ந்து சென்றதில், அது கோவளம் வரை சென்றுள்ளது. கோவளத்திலுள்ள ரிசார்ட் ஒன்றில் தங்கியிருந்த 3 பெண்கள் உட்பட 9 பேரை அதிரடியாக போலீசார் கைது செய்தனர். அதில் 4 ஆண்களும், 2 பெண்களும் ஈரானியர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
வெளிநாடுகளில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வருவோரை குறிவைக்கும் இந்தக் கும்பல், அவர்கள் தங்கியிருக்கும் பகுதியையும் நடமாட்டத்தையும் நோட்டம் விட்டு, போலீசார் எனக் கூறி, வழிப்பறியில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது.
அது மட்டுமின்றி கடந்த 10 நாட்களில் அசோக் நகர், விருகம்பாக்கம், கொளத்தூர், கே.கே. நகர் ஆகிய காவல் நிலைய பகுதியில், போலீஸ் எனக்கூறி கவனத்தை திசை திருப்பி, இந்தக் கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளதாகவும் போலீசார் கூறுகின்றனர். தீரன் திரைப்படத்தில் வருவதுபோல், ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள தெருக்கள், சாலைகளை நோட்டமிடுவது, அவ்வழியாக நடந்து வரும் முதியவர்களை குறிவைப்பது. அவர்களிடம் போலீஸ் எனக் கூறி நகைகளை மடித்து வைக்க சொல்லி, அதில் கற்களை மடித்து கொடுத்து ஏமாற்றுவது என பல்வேறு அட்டகாசங்களில் இந்தக் கும்பல் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளதாகவும் போலீசார் கூறுகின்றனர்.
தாங்கள் வசிக்கும் பகுதியில் சந்தேகத்துக்கிடமான தோற்றத்துடன், சந்தேகத்துக்கிடமான பார்வையுடன், சந்தேகத்துக்கிடமான பேச்சுடன் சுற்றித் திரியும் நபர்கள் குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர் போலீசார்.
Author: admin