‘இந்தியாவில் ஓடிடி சந்தை 10 ஆண்டுகளில் 1,250 கோடி டாலர் ஆக உயரும்’


2030-ம் ஆண்டில் இந்திய ஓடிடி சந்தை மதிப்பு 1,250 கோடி ஆக இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. ஆர்பிஎஸ்ஏ அட்வைசர்ஸ் நிறுவனம் இந்தக் கணிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது, இந்திய ஓடிடி சந்தை மதிப்பு 150 கோடி டாலராக மட்டுமே இருக்கிறது என்பது நினைவுகூரத்தக்கது.
இந்தியாவில் தற்போது முதல்கட்ட நகரங்களில் ஓடிடி நல்ல வளர்ச்சி அடைந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து அடுத்தகட்ட நகரங்களில் அடுத்த பத்தாண்டுகளில் வளர்ச்சி இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இணைய வேகம், ஸ்மார்ட்போன் போன்றவை ஓடிடியின் வளர்ச்சியில் கணிசமான பங்கினை வகிக்கும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் உள்ளிட்ட சர்வதேச ஓடிடி தளங்கள் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் பல தளங்கள் உருவாகி இருக்கின்றன. சோனி லிவ், ஆல்ட் பாலாஜி, ஈராஸ் ,ஜீ5, சன் நெக்ஸ்ட் உள்ளிட்ட தளங்கள் உருவாகி இருக்கின்றன.
தற்போது 150 கோடி டாலராக இருக்கும் இந்த சந்தை 2025-ம் ஆண்டு 400 கோடி டாலராக உயரும். 2030-ம் ஆண்டில் 1,250 கோடி டாலராக உயரும். அதாவது, அடுத்த நான்கு ஆண்டுகளில் ஆண்டுக்கு 28 சதவீத வளர்ச்சி இருக்கும்.
ஆடியோ ஓடிடி சந்தையும் வளர்ச்சி அடைந்து வருகிறது. கானா, ஜியோ சாவன், ஸ்பாடிபை உள்ளிட்ட சில நிறுவனங்களும் வேகமான வளர்ச்சி அடைந்து வருகின்றன. தற்போது இந்தச் சந்தை 60 கோடி டாலர் என்னும் அளவில் உள்ளது. 2025-ம் ஆண்டு 110 கோடி டாலராகவும், 2030-ம் ஆண்டில் 250 கோடி டாலர் சந்தையாகவும் மாறும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

Author: sivapriya