பிறந்து ஒருவாரமே ஆன பெண் குழந்தையை தலையில் அடித்துக் கொன்ற தாய்… விசாரணையில் அம்பலம்

நாமக்கல் அருகே பிறந்து ஒருவாரமே ஆன பெண் குழந்தையை தலையில் அடித்துக் கொன்ற தாய் கைது செய்யப்பட்டார்.

எருமப்பட்டியைச் சேர்ந்த கஸ்தூரி என்பவருக்கு கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி நாமக்கல் அரசு மருத்துவமனையில் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து வீடு திரும்பியபின் ஏப்ரல் 12ஆம் தேதி உடல்நலம் குன்றி குழந்தை உயிரிழந்ததாக கூறி உடலை உறவினர்கள் சுடுகாட்டில் புதைத்தனர்.

சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தை ஒருவாரத்தில் உயிரிழந்ததால் சந்தேகமுற்ற சுகாதாரத்துறையினர் எருமப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து ஏப்ரல் 14ஆம் தேதி குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூறாய்வு செய்யப்பட்டது. சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஹைதராபாத் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது.

இதையடுத்து மூன்று மாதத்திற்குப் பிறகு வந்த ஆய்வறிக்கையில், குழந்தை தலையில் அடிபட்டு உயிரிழந்தது உறுதியானது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் மூன்றாவதும் பெண்ணாக பிறந்ததால் குழந்தையின் தலையில் அடித்துக் கொன்றதாக தாய் கஸ்தூரி ஒப்புக்கொண்டார். அவரை எருமப்பட்டி காவல் துறையினர் கைது செய்தனர்.

Author: sivapriya