“என்னுடன் செல்ஃபி எடுக்க 100 ரூபாய்”: மத்திய பிரதேச அமைச்சர் உஷா தாக்கூர்


தன்னுடன் செல்ஃபி எடுக்க விரும்புவோர் உள்ளூர் கட்சி பிரிவுக்கு 100 ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் இது கட்சிப்பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என்றும் மத்திய பிரதேச அமைச்சர் உஷா தாக்கூர் தெரிவித்தார்.
மத்தியப் பிரதேசம் மாநிலம் ந்துவாவில் ஊடகங்களிடம் பேசிய அமைச்சர் உஷா தாகூர், “நண்பர்களே, நீங்கள் அனைவரும் செல்ஃபி எடுக்க மிகவும் நேரம் எடுக்கும், சில சமயங்களில் இதனால் எங்களுக்கு பல மணிநேரம் தாமதமாகிவிடுகிறது என்பது உங்களுக்குத் தெரியும். எனவே இனி யார் செல்ஃபி எடுத்தாலும் 100 ரூபாயை கட்சியின் உள்ளூர் பிரிவில் செலுத்தவேண்டும். கட்சிப் பணிகளுக்கு இந்த தொகை பயன்படுத்தப்படலாம். அதுபோல பூக்களுடன் வரவேற்பதைப் பொறுத்தவரை, லக்ஷ்மி தேவி பூக்களில் வசிக்கிறார் என்று நாங்கள் நம்புகிறோம். எனவே அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபட்ட பகவான் விஷ்ணுவைத் தவிர வேறு யாருக்கும் பூக்களை ஏற்றுக்கொள்ள உரிமை இல்லை. எனவே நான் பூக்களை ஏற்கவில்லை. பிரதமர் கூட பூக்கள் வேண்டாம், புத்தகம் கொடுங்கள் என்று வலியுறுத்தியுள்ளார். எனவே புத்தகங்களை சேகரிக்க முடிந்தால், கட்சி அலுவலகத்தில் ஒரு நூலகத்தை உருவாக்குவோம் “என்று கூறினார்.
மத்திய பிரதேசத்தில் அம்பேத்கர் நகர்-மோவ் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான உஷா தாக்கூர் , சமீபத்தில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்ற மக்கள் பிஎம் கேர் நிதிக்கு 500 ரூபாய் நன்கொடையாக வழங்க வேண்டும் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

Author: sivapriya