மசாலாவை ஒரு முறை இப்படி அரைத்து ‘அவரைக்காய் க்ரீன் கரி’ செய்து பாருங்கள்! அவரைக்காயை பிடிக்காதவங்க கூட இன்னும் வேணும்னு கேட்டு சாப்பிடுவாங்க.

சாதாரணமாக நம்முடைய வீட்டில் செய்யும் அவரக்காய் பொரியல் போல இந்த ரெசிப்பி இருக்காது. கொஞ்சம் வித்தியாசமான முறையில் மசாலா பொருட்களை சேர்த்து, வித்தியாசமான சுவையில் செய்யப்போகும் அவரக்காய் கிரீன் கரி ரெசிபியை எப்படி செய்வது. தெரிந்துக்கொள்வோம் வாருங்கள். முதலில் 100 கிராம் அளவு அவரைக்காயை எடுத்துக்கொள்ளுங்கள். அவரைக்காயில் இருக்கும் நாரை நீக்கி விட்டு, சுத்தமாக கழுவிவிட்டு ஓரளவிற்கு பெரிய துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.

avaraikai1

அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளுங்கள். அதில் நறுக்கி, கழுவி தயாராக இருக்கும் அவரை காய்களை சேர்த்து, அவரைக்காய் பாதி மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, பாதி அளவு வேகும்வரை தயார் செய்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அவரைக்காய் குழைந்துபோய் வேகக் கூடாது. கட்டாயம் பாதி அளவு தான் காய் வெந்திருக்க வேண்டும். அப்போதுதான் பொரியல் சுவையாக இருக்கும். (அவரக்காய் வேகும்போதே நீங்கள் ஊற்றிய தண்ணீர் அனைத்தும் சுண்டி விடும்.)

அடுத்தபடியாக ஒரு சிறிய மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் பச்சை மிளகாய் – 3, தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், பூண்டு பல் தோல் உரித்தது – 2, சிறிய பின்ச் இஞ்சி – 1 துண்டு, மல்லித்தழை – 1/2 கைப்பிடி அளவு, இந்த பொருட்களை எல்லாம் தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதுவும் அப்படியே இருக்கட்டும்.

avaraikai2

இப்போது அவரைக்காய் க்ரீன் கரி தாளிக்க செல்வோம். அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளுங்கள். அதில் எண்ணெய் – 1 ஸ்பூன் அளவு ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 ஸ்பூன், சேர்த்து இந்த பொருட்களை எல்லாம் நன்றாக வதக்கவேண்டும்.

வெங்காயம் வதங்கியவுடன், பாதி அளவு வேக வைத்திருக்கும் அவரைக்காயை கடாயில் சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு, கூடவே அரைத்து வைத்திருக்கும் மசாலாவையும் அவரக்காயுடன் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து விட்டு, இந்த அவரைக்காயை ஐந்திலிருந்து ஏழு நிமிடங்கள் நிமிடங்கள் வதக்கவும்.

avaraikai3

தண்ணீர் தேவைப்படாது. தேவைப்பட்டால் 1 ஸ்பூன் அளவு தண்ணீரை மட்டும் தெளித்து அரைத்த மசாலா பச்சை வாடை நீங்கி, மசாலா அனைத்தும் அவரைக்காயில் ஒட்டும் வரை வதக்கினால் போதுமானது. இந்த சூட்டிலேயே பாதி வெந்திருக்கும் அவரை காய்கள் நன்றாக வெந்து தயாராகிவிடும். சுடசுட இந்த பொரியலை எந்த சாதத்திற்கு வேண்டுமென்றாலும் சைட் டிஷ்ஷாக பரிமாறலாம். சாப்பிடுவதற்கு சுவை வித்தியாசமாகவும் இருக்கும். மேலே சொன்ன இந்த அளவுகளில் அவரக்காய் பொரியல் செய்தால் இரண்டு பேர் தாராளமாக சாப்பிடலாம். ருசியாகவும் இருக்கும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.

Author: admin