சென்னை: தாய் மற்றும் மகளுக்கு பாலியல் தொல்லை; பாஜக பிரமுகர் மீது போக்சோ வழக்குப்பதிவு

சென்னையை சேர்ந்த தாய் மற்றும் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் புகாரில் பாரதிய ஜனதா வழக்கறிஞர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.
எருக்கஞ்சேரியை சேர்ந்த பார்த்தசாரதி, பாரதிய ஜனதா வழக்கறிஞர் பிரிவில் உள்ளார். அவர் மீது பெண் ஒருவர், காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார். அதில், தனக்கும், தனது மகள்களுக்கும் பார்த்தசாரதி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், ஏற்கெனவே அளிக்கப்பட்ட புகாரில் அவர் கைதாகி, உடனே ஜாமீனில் வெளிவந்தாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதன்பிறகு பார்த்தசாரதி மீண்டும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக அந்தப்பெண் தெரிவித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில், பார்த்தசாரதி மீது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தல், ஆபாசமாக திட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும், புகாரளித்த பெண்ணின் 15 வயது மகளுக்கும் பார்த்தசாரதி பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியான நிலையில், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது தலைமறைவாக உள்ள பார்த்தசாரதியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Author: sivapriya