குளித்தலை அருகே கண்டெய்னர்- டாரஸ் லாரி நேருக்கு நேர் மோதல்: ஒருவர் பலி; இருவர் படுகாயம்

முகப்பு
ஒரு நிமிட வாசிப்பு
க.ராதாகிருஷ்ணன்
க.ராதாகிருஷ்ணன்

குளித்தலை அருகே கண்டெய்னர் லாரி, டாரஸ் லாரி ஆகிய இரண்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இருவர் படுகாயம் அடைந்தனர்.

பெரம்பலூர் மாவட்டம், அய்யலூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகராஜ். இவர் சென்னையில் இருந்து கேரளாவிற்கு லோடு ஏற்றுவதற்காக கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்துள்ளார். இன்று அதிகாலை 3.30 மணியளவில் திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மணத்தட்டை அருகே வந்தபோது எதிரே கரூரிலிருந்து எம்.சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு கரூர் சுக்காலியூர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவர் ஓட்டிவந்த டாரஸ் லாரி எதிரே வந்தது. அப்போது இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இந்த விபத்தில் இரு லாரிகளின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. இதில் கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்த முருகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் கண்டெய்னர் லாரி கிளீனர் சண்முகம் மற்றும் டாரஸ் லாரி ஓட்டுநர் முருகேசன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்துத் தகவல் அறிந்த குளித்தலை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த இருவரும் தற்போது கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Author: sivapriya