மோர் குழம்பை இப்படி வைத்தால் பக்குவமே தவறாது! நீர்த்துப் போகாமல் சரியான பக்குவத்தில் பூசணிக்காய் மோர் குழம்பு எப்படி வைப்பது?

நிறைய பேருக்கு மோர் குழம்பை பக்குவமாக வைக்க தெரியாது. சில பேர் மோர் குழம்பு வைத்தால் அது நீர்த்துப் போய்விடும். அப்படி நீர்த்துப் போகாமல் பக்குவமாக பூசணிக்காய் வைத்து மோர் குழம்பு எப்படி வைப்பது என்று தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த குறிப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் டிப்ஸை சரியாக பின்பற்றி மோர் குழம்பு வைத்தால் நிச்சயமாக பக்குவம் தவறாது. சரி, ரெசிபிக்கு செல்வோமா?

moorkuzhambu1

முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் துவரம்பருப்பு 2 ஸ்பூன், 2 சிறிய துண்டு பெருங்காயம், இந்தப் 2 பொருட்களைப் போட்டு தண்ணீர் ஊற்றி 20 நிமிடங்கள் ஊறவைத்துக் கொள்ளுங்கள். இது அப்படியே இருக்கட்டும்.

அடுத்தபடியாக 1 கிலோ அளவு வெள்ளை பூசணி காய்களை தோல் நீக்கி சுத்தம் செய்து, கொஞ்சம் பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கி கழுவி வைத்துக் கொள்ளுங்கள். இதுவும் அப்படியே இருக்கட்டும். (வெள்ளைப்பூசணிக்கு பதிலாக சௌசௌ, சுரைக்காய் சேர்த்தும் இந்த மோர் குழம்பு வைக்கலாம். இருப்பினும் வெள்ளைப்பூசணி பெஸ்ட்.)

moorkuzhambu2

இப்போது மோர் குழம்புக்கு தேவையான அரவையை அரைக்கவேண்டும். 1 மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் தேங்காய் துருவல் – 1/2 மூடி, சீரகம் – 1 டேபில் ஸ்பூன், தோலுரித்த சின்ன வெங்காயம் – 3 பல், இஞ்சி சிறிய பின்ச் – 3 துண்டு, பச்சை மிளகாய் – 10, ஏற்கனவே ஊற வைத்திருக்கும் துவரம் பருப்பு, பெருங்காயம் இதையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த தேங்காய் விழுது 90 சதவிகிதம் அரைத்தால் போதும். நைசாக மொழு மொழுவென அறைத்துவிட வேண்டாம். இந்த தேங்காய் அறிவையும் அப்படியே இருக்கட்டும்.

இப்போது குழம்பு செய்ய ஆரம்பிக்க போகின்றோம். ஒரு கடாயை அடுப்பில் வைத்து, வெட்டி வைத்திருக்கும் வெள்ளை பூசணியை கடாயில் போட்டுக் கொள்ள வேண்டும். பூசணிக்காய் பாதி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக்கொள்ள வேண்டும். ஏனென்றால் பூசணிக்காய் வேகும் போது அதிலிருந்து கொஞ்சம் தண்ணீர் வெளியாகும். ஆக நிறைய தண்ணீர் ஊற்றி பூசனிக்காயை வேக வைக்க வேண்டாம்.

moorkuzhambu3

பூசணிக்காய் பாதி வெந்து வந்ததும், மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை கடாயில் சேர்த்து, குழம்புக்கு தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள், போட்டு ஒருமுறை கலந்து விட்டு, நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இடையிடையே கரண்டியை வைத்து இந்த குழம்பை கலந்து விட்டுக் கொண்டே இருக்கவேண்டும். மூடி போட்டு காயை வேக வைக்கவேண்டும். பூசணிக்காயை கையில் எடுத்து நசுக்கி பார்த்தால் சாப்டாக வரும்வரை வேக வேண்டும். (அடுப்பை மிதமான தீயில் வைத்து, அரவையை பூசணிக்காயில் சேர்த்த பின்பு, 5லிருந்து7 நிமிடங்கள் வேக வைத்தால் சரியாக இருக்கும்.)

moorkuzhambu4

இதற்குள் 1/2 லிட்டர் அளவு தயிரை மிக்ஸியில் ஊற்றி அடித்துக் கொள்ளுங்கள். உங்களால் மத்தைக் கொண்டு தயிரை கையாலேயே கடைய முடியும் என்றாலும் அடைந்து கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம். ஆனால் குழம்பு கொதித்துக் கொண்டிருக்கும் போதுதான் தயிரை கடைந்து, அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கும் குழம்பில் ஊற்ற வேண்டும். முன்கூட்டியே தயிரை அடித்து வைத்து விட்டால் தயிர் நீர்த்துப் போவதற்கு வாய்ப்பு உள்ளது. (தயிர் கொஞ்சம் புளித்த தயிராக இருந்தால் மோர் குழம்பு சுவையாக இருக்கும்.)

thayir-kadaithal

சரி, இப்போது பூசணிக்காய் வெந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு, அடித்து வைத்திருக்கும் தயிரை கடாயில் ஊற்றி கொண்டே ஒரு கரண்டியில் குழம்பை கலந்துவிட வேண்டும். (இந்தப் பக்குவம் மிக மிக முக்கியம். ஒரு கையில் தயிரை ஊற்ற வேண்டும். ஒரு கையில் கரண்டியை வைத்து குழம்பை கலந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் மோர் குழம்பு திரிந்து போகாமல் இருக்கும்.)

moorkuzhambu5

தயிரை, குழம்பில் ஊற்றிய உடன் குழம்பு இரண்டு கொதி வந்து நுரை கட்டிய உடன், கரண்டி கொண்டு குழம்பை நன்றாக கலந்து விட்டு, அடுப்பை அணைத்து விட்டு. அடுப்பிலிருந்து மோர் குழம்பை உடனடியாக கீழே இறக்கி வைத்து விடுங்கள். தயிர் ஊற்றிய உடன் குழம்பை அதிக நேரம் கொதிக்க வைக்கக் கூடாது. (தயிரை ஊற்றிய உடன் குழம்பு குதித்து வர 4 லிருந்து 5 நிமிடம் வரை எடுக்கிறது என்றால், அது வரைக்கும் குழம்பை ஒரு நிமிடத்திற்கு ஒருமறை கரண்டியை வைத்து கலக்க வேண்டும். குழம்பை கலக்காமல் அப்படியே விட்டாலும் குழம்பு நீர்த்துப் போக வாய்ப்பு உள்ளது.)

moorkuzhambu6

இந்த குழம்புக்கு அடுத்தபடியாக ஒரு தாளிப்பு கொடுக்கவேண்டும். தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து அதில் 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1 ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன், பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன், கறிவேப்பிலை – 2 கொத்து, வரமிளகாய் – 4 லிருந்து 6 (கட்டாயம் வரமிளகாய்களை விதையோடு கிள்ளி தாளிக்க வேண்டும்), சேர்த்து நன்றாக பொரியவிட்டு இதை அப்படியே மோர்க் குழம்பில் ஊற்றி, கலந்து விட்டு பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழைகளைத் தூவி சுவைத்துப் பாருங்கள். அற்புதமான சுவையில் மோர்க்குழம்பு தயாராகி இருக்கும்.

moorkuzhambu7

மேல் சொன்ன அளவுகளில் மோர் குழம்பு வைத்தால் 4 லிருந்து 5 பேர் தாராளமாக சாப்பிடலாம். உங்களுக்கும் இந்த குறிப்பு பிடித்திருந்தால் உங்களுடைய வீட்டில் முயற்சி செய்து இந்த மோர் குழம்பை ருசிக்க மறக்காதீங்க.

Author: admin