கிருஷ்ணகிரி ரவுண்டானாவில் தீவிர கண்காணிப்பு-வெறிச்சோடிய சேலம் சாலை மாவட்டத்தில் முழு அளவில் ஊரடங்கு கடைபிடிப்பு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் நேற்று 4வது நாளாக சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது. தமிழகத்தில் 2வது அலை கொரோனா வேகமாக பரவி வருகிறது. சென்னை, கோவை, மதுரை, சேலம் போன்ற பெருநகரங்களுக்கு அடுத்தப்படியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இக்கொரோனா வேகமாக பரவி வருகிறது.

ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநில எல்லையில் இம் மாவட்டம் அமைந்துள்ளதால் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. இதற்காக ஏற்படுத்தப்பட்ட பெரும்பாலான படுக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டது. அத்துடன் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் கிடைப்பதில் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதனால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, கடந்த 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தினமும் பகல் 12 மணிக்கு அனைத்து வகையான கடைகளும் அடைக்கப்படுவதால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி விடுகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 4வது நாளாக முழு ஊரடங்கு கடை பிடிக்கப்பட்டதால், சாலைகளில் வாகனங்கள் இன்றியும், பொதுமக்களின் நடமாட்டம் இல்லாமலும் வெறிச்சோடி காணப்பட்டது. குறிப்பாக கிருஷ்ணகிரி நகரில் எப்போதும் மக்கள் மற்றும் வாகன நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளான 5 ரோடு ரவுண்டானா, பெங்களூர் ரோடு, சேலம் ரோடு, பழைய சப்-ஜெயில் ரோடு, காந்தி ரோடு பகுதியில் வாகன நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் ஆங்காங்கே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் மீண்டும், மீண்டும் சுற்றித்திரியும் வாகன ஓட்டிகளை அடையாளம் கண்டு, அவர்களை அழைத்து அறிவுரை வழங்கியும், எச்சரித்தும் அனுப்பினர்.

Facebook Comments Box
Author: sivapriya