காய்ந்து போன சப்பாத்தி, புளித்துப் போன இட்லி மாவு இதையெல்லாம் வீணாக்குபவரா நீங்கள்? இதெல்லாம் தெரிஞ்சா இனி அதையெல்லாம் வீணாக்கவே மாட்டீங்க!

சமையல் என்பது ஒரு மிகப்பெரிய கலையாக இருந்து வருகிறது. எல்லோருக்கும் இந்த கலையை சரியாக கையாளுவது என்பது முடிவது இல்லை. ஒரு சிலர் அதில் அதிக ஆர்வம் கொண்டு அந்தக் கலையில் சிறந்த நபராக கற்றுத் தேர்ந்து விடுகிறார்கள். ஆனால் பலரும் அதில் இருக்கும் சிறிய நுணுக்கமான விஷயங்களை தெரிந்து கொள்ளாமல் தோல்வி அடைந்து விடுகிறார்கள். அப்படியான நுணுக்கமான சில விஷயங்களையும், வீணாகும் சாப்பாட்டை புதிய முறையில் எப்படி எளிதாக மாற்றுவது? என்பதையும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

முதலில் நீங்கள் அதிகமாக சப்பாத்தி சுட்டு வைத்திருக்கிறீர்கள் என்றால், பெரும்பாலும் அது குப்பைக்கு தான் செல்லும். ஆறி போனால் காய்ந்து வறண்டு விடும் சப்பாத்தியை வைத்து வேறு என்ன செய்ய முடியும்? என்று கேட்க வேண்டாம். காய்ந்து போன சப்பாத்திகளை பிச்சி போட்டு அதில் காய்ச்சிய பால் ஊற்றி, சர்க்கரை சேர்த்து ஊற வைத்து சாப்பிடுபவர்களும் உண்டு. அப்படி அல்லாமல் வெயிலில் நன்கு காய வைத்து அது மொறுமொறுவென்று ஆனவுடன் தனியாக ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள் தேவையான பொழுது, அதிலிருந்து சிறிது சிறிதாக எடுத்து, எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம். சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். இது போல் காய்ந்து போன தோசையும் கூட செய்யலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

இட்லி மாவு அதிகமாக புளிப்பு தெரிந்தால் அதில் அரை டம்ளர் அளவிற்கு தண்ணீரை ஊற்றி நன்கு கலந்து கொள்ளுங்கள். 15 நிமிடம் கழித்து பார்த்தால் தண்ணீர் மேலே தெளிந்து நிற்கும். அந்த தண்ணீரை அப்படியே கீழே ஊற்றி விட்டு, பின்னர் தோசை வார்த்து பாருங்கள், அவ்வளவாக புளிப்பு தெரியாது. இவ்வளவு நேரம் எல்லாம் காத்திருக்க முடியாது என்பவர்கள் சிறிதளவு காய்ச்சி ஆறிய பசும்பாலை சேர்த்து தோசை வார்த்து பாருங்கள், புளிப்பு குறைந்து போயிருக்கும்.

ven-pongal2

வெண்பொங்கலில் சேர்க்கும் மிளகானது பலருக்கும் பிடிப்பது இல்லை. குறிப்பாக குழந்தைகள் அதனை எடுத்துவிட்டு தான் சாப்பிடவே செய்வார்கள். மிளகு விற்கும் விலைக்கு, மிளகில் இருக்கும் சத்துக்கள் தேவை இல்லாமல் வீணாகாமல் இருக்க, ஆரோக்கியம் மேம்பட மிளகை நன்கு சாதாரண கடாயில் போட்டு வறுத்து பின்னர் தட்டி சேர்த்து பாருங்கள். பொங்கலும் ருசியாக இருக்கும், கண்களுக்கு தெரியாமல் மிளகும் வயிற்றுக்குள் சென்றுவிடும்.

அரிசி, பருப்பு, அரைத்து வைத்த மசாலா போன்றவற்றில் வெகு விரைவாக மழைக்காலத்தில் பூச்சிகள் வரத் துவங்கும். இதற்கு காய்ந்து போன கறிவேப்பிலை இலைகளை தூக்கி போடாமல் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு அதை இவற்றில் போட்டு வைத்தால் எந்த பூச்சிகளும், புழுக்களும் வராது பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.

milk-boiling

வெயில் காலங்களில் அடிக்கடி பால் திரிந்து போகிறதா? வாங்கும் பால் இனி வீணாக்க வேண்டாம்! பால் காய்ச்சிய பின் அதில் நாலைந்து நெல் விதைகளை போட்டு வைத்தால் போதும், விரைவாக பால் திரியாமல் இருக்கும். சரி அப்படி திரிந்து போன பாலை வைத்து என்ன செய்ய முடியும்? பால் திரிந்து விட்டால் பலரும் அதனை சாப்பிடக்கூடாது என்று நினைக்கிறார்கள். திரிந்த பாலை வடிகட்டி அதில் சர்க்கரை சேர்த்து தாராளமாக சாப்பிடலாம். வடிகட்டிய அந்த தண்ணீரில் வெள்ளி பாத்திரங்களை ஊற வைத்து தேய்த்தால், வெள்ளியில் இருக்கும் கறுத்த நிறம் எளிமையாக நீங்கி புதியது போல பளிச்சென மின்னும்.

வெங்காயம் உரிக்கும் பொழுது கண்களில் எரிச்சலும், கண்ணீரும் வருகிறதா? வெங்காய தோலை உரித்து, இரண்டாக வெட்டி வெங்காயத்தை 5 நிமிடம் தண்ணீரில் போட்டுக் கொள்ளுங்கள். அதற்குள் வெங்காயம் நறுக்க இருக்கும் கத்தியை நன்கு சூடு படுத்திக் கொள்ளுங்கள். பின்னர் வெங்காயத்தை எடுத்து நறுக்கினால் உங்கள் கண்களில் எரிச்சலும், கண்ணீரும் வராவே செய்யாது.

onion-garlic

பூண்டு பேஸ்ட் செய்யும் பொழுது பூண்டை உரிக்க வேண்டிய அவசியம் இனி இல்லை. தோலுடன் சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் அரைத்தால் பூண்டு தோல் தனியாகவும், பூண்டு நன்கு அரைபட்டு கீழே அடியிலும் தங்கிவிடும். தோல் பகுதியானது ஜாரின் மூடியில் ஒட்டிக் கொண்டிருக்கும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்து விடலாம். வேலையும், நேரமும் மிச்சம் ஆகிவிடும்.

killi-sambar

சாம்பார், வத்தக்குழம்பு போன்ற குழம்பு வகைகளில் காரம் அதிகமாகி விட்டால் கொஞ்சம் நல்லெண்ணெய் சேர்த்து கொதிக்க விடுங்கள். காரம் அடங்கி ருசியும் கூடும். இதுவே குருமா, சால்னா போன்ற கிரேவி குழம்பு வகைகளில் காரம் அதிகமாகி விட்டால் அதில் நல்லெண்ணெய்க்கு பதிலாக, வெண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். காரம் குறைந்து குருமாவின் ருசியை கூடிவிடும்.

Author: admin