மே 31ஆம் தேதி வரை திரைப்படம், சின்னத்திரை படப்படிப்புகள் ரத்து – ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி

சென்னை,

கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. இன்று முதல் மேலும் சில கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி அத்தியாவசிய தேவையான மளிகை மற்றும் காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டும் செயல்படும் என்றும், தேநீர் கடைகள் இயங்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே படப்பிடிப்புகளுக்கு நெறிமுறைகளை பின்பற்றி நடத்தி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்படிப்புகள் வரும் மே 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ஃஃபெப்ஸி அமைப்பின் தலைவரும், இயக்குநருமான ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “சென்ற வாரம் முதல்-அமைச்சரை சந்தித்தோம். சரியான வழிமுறைகள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். கொரோனோ நிவாரண நிதி உதவியாக கூடுதலாக திரைப்பட தொழிலாளர்களுக்கு 2000 வழங்க வேண்டும், திரைப்பட தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த தனி முகாம் ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுள்ளோம். சினிமா தொழிலாளர்கள் கொரோனோவால் பாதிக்கப்பட்டு, மருத்துவ படுக்கை கிடைக்காமல் உயிரை இழக்கும் நிலை உள்ளது. படப்பிடிப்புக்கு அரசு அனுமதி தர வேண்டாம். இந்த மாதம் இறுதி வரை படப்பிடிப்பில் ஈடுபட மாட்டோம் என்று உறுதி எடுத்துள்ளோம்” என்று ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box
Author: sivapriya