திருவொற்றியூர் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு; அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்

திருவொற்றியூர்,

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்துக்கு உட்பட்ட மணலி விரைவு சாலையில் எர்ணாவூர் மேம்பாலத்தில் இருந்து சத்தியமூர்த்தி நகர் பக்கிங்காம் கால்வாய் வரை சுமார் 40 அடி அகலம் கொண்ட சர்வீஸ் சாலை உள்ளது. அதனைஒட்டி மழைநீர் கால்வாய் அமைக்க 6 அடி அகல இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த இடத்தை அப்பகுதியைச்சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து கடை மற்றும் வீட்டின் சுற்றுச்சுவர்களை கட்டி உள்ளனர். தற்போது இந்த சர்வீஸ் சாலை மற்றும் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியை தொடங்க மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.

அதிகாரிகளுடன் வாக்குவாதம்

இதையடுத்து திருவொற்றியூர் மண்டல செயற்பொறியாளர் பால் தங்கதுரை, உதவி செயற்பொறியாளர் கோவிந்தராஜ், உதவி பொறியாளர் அமல்ராஜ் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மணலி விரைவு சாலை சத்தியமூர்த்தி நகர் பகுதிக்கு வந்தனர். அங்கே கால்வாய் அமைக்கும் இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த மதுபான பார், கடைகள் மற்றும் வீடுகளின் முன்புறம் உள்ள சுற்றுச்சுவர்களை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தள்ளினர்.

அப்போது கடைகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மண்டல அதிகாரிகளுடன் வியாபாரிகள் கடும் வாக்குவாதம் செய்தனர். பின்னர் போலீசாரின் உதவியுடன் மாநகராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Facebook Comments Box
Author: sivapriya