எவரெஸ்ட் மலை ஏற்றத்திற்கு சீனா திடீர் தடை

பிஜீங்,

எவரெஸ்ட் மலையின் கிழக்குச் சரிவுப் பாதைக்குச் செல்ல மலையேற்ற வீரா்களுக்கு அளித்திருந்த அனுமதியை சீனா ரத்து செய்தது.

இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

கொரோனா நெருக்கடி காரணமாக, மலையேற்ற வீரா்கள் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு நேபாளமும் சீனாவும் தடை விதித்திருந்தன.

இந்தச் சூழலில், தனது எல்லைக்குள் அமைந்துள்ள எவரெஸ்ட் மலையேற்றப் பாதையான கிழக்குச் சரிவுப் பாதைக்குச் செல்ல 38 மலையேற்ற வீரா்களுக்கு சீன அரசு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை கடந்த வாரம் அளித்தது.

மலையேற்ற வீரா்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, அவா்களுக்கு அந்த நோய் பாதிப்பு இல்லாமல் இருந்தால் மட்டுமே அவா்கள் மலையேற்றத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். அவா்கள் அனைவரும் தங்களிடையே சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்; அத்துடன் அவ்வப்போது அவா்கள் உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு உள்படுத்தப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனா்.

இந்த நிலையில், நேபாளத்திலிருந்து மலையேற்ற வீரா்களுக்கு கொரோனா பரவலாம் என்ற அச்சத்தின் காரணமாக, எவரெஸ்ட் மலையேற்ற அனுமதியை சீனா ரத்து செய்துள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author: sivapriya