இத்தாலியில் இருந்து 2 விமானங்களில் ஆக்சிஜன் உற்பத்தி தளவாடம் பெங்களூரு கொண்டு வரப்பட்டது

புதுடெல்லி,

இந்தியாவில் நிலவி வரும் உயிர்காக்கும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய உலக நாடுகள் பலவும் இந்தியாவுக்கு ஆக்சிஜன் உற்பத்தி தளவாடங்களை வழங்கி வருகின்றன.

அந்த வகையில் இத்தாலி தலைநகர் ரோமில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளில் பயன்படுத்தப்படும் 35 டன் ஜியோலைட் தாது 2 விமானங்கள் மூலம் நேற்று பெங்களூரு கொண்டுவரப்பட்டதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) ஜியோலைட் சரக்குகளுக்கான பட்டய நிறுவனமாக உள்ளது. வரும் வாரங்களில் உலகெங்கிலும் பல இடங்களில் இருந்து டி.ஆர்.டி.ஓ-வுக்கான ஜியோலைட் தாது ஏர் இந்தியா விமானங்களில் கொண்டு வரப்பட உள்ளது.

இதற்காக மே 15 முதல் 18 வரை ரோமில் இருந்து பெங்களூருவுக்கு 7 சரக்கு விமானங்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து கொரியாவில் இருந்து பெங்களூருவுக்கு மே 19 முதல் 22 வரை 8 சரக்கு விமானங்கள் இயக்கப்படும். தொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களில் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் பெல்ஜியம் நாடுகளில் இருந்து ஜியோலைட் தாதுவை கொண்டு வருவதற்கான விமானங்கள் இயக்கப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Author: sivapriya