இந்திய மக்களிடம் மத்திய அரசு தொடர்ந்து பொய் சொல்லி வருகிறது – ப.சிதம்பரம் கடும் விமர்சனம்

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமெடுத்து வரும் சூழ்நிலையில் வைரஸ் பரவலை தடுக்க ஒரேவழியாக கருதப்படும் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமடைந்து வருகிறது.

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கும் கொரோனா தடுப்பூசி போதிய அளவில் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், கொரோனா தடுப்பூசி உற்பத்தி உரிமையை ஒரு நிறுவனத்திற்கு மட்டும் வழங்காமல் பிற நிறுவனங்களுக்கும் வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்தது. அந்த கோரிக்கை விடுக்கப்பட்டு 4 வாரங்கள் கழித்து வேறு நிறுவனங்களும் கோவாக்சின் தடுப்பூசியை தயாரிக்க மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதிமந்திரியுமான ப.சிதம்பரம் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், கொரோனா தடுப்பூசி உற்பத்தி உரிமையை பிற நிறுவனங்களுக்கும் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் காரிய கமிட்டி ஆலோசனை கூறி 4 வாரங்கள் கழித்து கோவாக்சின் தடுப்பூசியை உற்பத்தி செய்ய விண்ணப்பிக்க பிற நிறுவனங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

ஒருபோதும் இல்லாமல் இருப்பதற்கு காலதாமதம் ஏற்பட்ட்டாலும் செய்வது சற்று நல்லது தான். ஆனால், இந்த 4 வாரகால தாமதத்தால் அந்த காலத்தில் தவிர்த்திருக்ககூடிய கொரோனா பரவல் மற்றும் உயிரிழப்புகளுக்கு பொறுப்பு ஏற்பது யார்?

உள்நாட்டு உற்பத்திக்கும் தேவைக்கு இடையே உள்ள மிகப்பெரிய இடைவெளியை எளிமையாக கணிக்காமல் தவறு செய்தது யார்? வெளிநாட்டில் எந்த நிறுவனத்திடம் இருந்து கொரோனா தடுப்பூசியை இறக்குமதி செய்வது என்று மத்திய அரசு இன்னும் முடிவு செய்யவில்லை என்பது உண்மை தானா? இந்திய மக்களிடம் மத்திய அரசு தொடர்ந்து பொய் சொல்லி வருகிறது’ என்றார்.

Author: sivapriya