மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது மத்திய அரசின் பொறுப்பு – பிரதமர் மோடிக்கு பஞ்சாப் முதல்மந்திரி கடிதம்

சண்டிகர்,

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமெடுத்து வரும் சூழ்நிலையில் வைரஸ் பரவலை தடுக்க ஒரேவழியாக கருதப்படும் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமடைந்து வருகிறது.

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கும் கொரோனா தடுப்பூசி போதிய அளவில் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், தனியார் நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசியை மாநில அரசுகள் வாங்கிக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. இதனை தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகள் வெளிநாடுகளில் இருந்து கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்ய முயற்சி மேற்கொண்டு வருகின்றன. தமிழக அரசும் வெளிநாடுகளில் இருந்து கொரோனா தடுப்பூசியை கொள்முதல் செய்ய ஏதுவாக உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகள் கோரியுள்ளது.

இந்நிலையில், நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது மத்திய அரசின் பொறுப்பு என்று பிரதமர் மோடிக்கு பஞ்சாப் முதல்மந்திரி அமரீந்தர் சிங் கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில், பெருந்தொற்று காலத்தில் தகுதியுடைய ஒட்டுமொத்த மக்களுக்கும் (கொரோனா) தடுப்பூசி போடுவது மத்திய அரசின் பொறுப்பு. இதில் கூட்டு முயற்சி இல்லாமல் இருப்பது எஞ்சியவற்றை குறைத்து மதிப்பிடும் செயலாகும். 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட வெளிநாடுகள், உள்நாட்டில் கொள்முதல் செய்ய பல்வேறு மாநில அரசுகள் முயற்சித்து வரும் சூழ்நிலையில் ஒற்றை ஏஜென்சியாக மத்திய அரசு செயல்பட்டு கொரோனா தடுப்பூசி பெறப்படும் அனைத்து வழிகளையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.

கொரோனாவை கட்டுப்படுத்துதல் மற்றும் தடுப்பூசி போன்ற விவகாரத்தில் மத்திய அரசு தனது பொறுப்பை சரிவர செய்யவில்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Author: sivapriya