நிலைமை கட்டுக்குள் உள்ளது: கொரோனாவின் 3-ஆம் அலையை எதிர்கொள்ள தயார் – உத்திரப்பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்

null

லக்னோ,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை, உலகின் பிற எந்த நாட்டிலும் ஏற்பட்டிராத வகையில் சுனாமி அலைகள் போல தாக்கி வருகிறது. நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 2 லட்சத்து 81 ஆயிரத்து 386 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 49 லட்சத்து 65 ஆயிரத்து 463 ஆக உயர்வடைந்து உள்ளது. கொரோனா பாதிப்பால் நாட்டில் 4,106 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,74,390 ஆக உயர்ந்து உள்ளது.

இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்திலும் கொரோனாவின் தாக்கம் அதிக அளவில் இருப்பதால் கொரோனாவின் மூன்றாம் அலை ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த கொரோனாவின் மூன்றாம் அலை எதிர்கொள்வதற்கான பல்வேறு வழிமுறைகளையும் உத்தரபிரதேச அரசு இப்போதே ஆரம்பித்து விட்டது. மேலும், இந்த மூன்றாம் அலை குழந்தைகளை அதிகம் தாக்கும் என்பதால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான பிரத்தியேக மருத்துவமனைகளும் அமைக்கப்பட வேண்டும் என அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நொய்டாவில் கொரோனா சிகிச்சைக்கான நடவடிக்கைகள் குறித்து அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆய்வுகள் மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “தற்போது கொரோனா நிலைமை கட்டுக்குள் உள்ளது. கொரோனாவின் மூன்றாம் அலையை எதிர்கொள்வதற்காக உத்தரபிரதேச அரசு தற்போது தயாராகி வருகிறது. மருத்துவ அவசர சேவையான 102 இன் கீழ் 2200 ஆம்புலன்ஸ்கள் தயாராக இருக்கிறது.

இது தவிர மருத்துவமனை மூலமாகவும் சிகிச்சைக்கான ஆலோசனைகள் தொலைபேசி வாயிலாக வழங்கப்பட்டு வருவதுடன் உயிரிழப்பு விதத்தை ஒரு சதவீதத்துக்கும் குறைவாக வைக்கப்பட்டுள்ளது. கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு புதிய சவாலாக உருவெடுத்துள்ள கருப்பு பூஞ்சைத் தொற்றை எப்படி ஒழிப்பது மற்றும் அதற்கான சிகிச்சை குறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சுகாதார அதிகாரிகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளுடன் காணொலி வழியாக ஆலோசனை கூட்டத்தை அரசு நடத்தி உள்ளது. கருப்பு பூஞ்சைத் தொற்றுக்கு தகுந்த நேரத்தில் உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டால் அதை தவிர்த்து விடலாம். இது தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

Author: sivapriya