உதவ யாரும் முன்வரவில்லை.. -கொரோனாவால் இறந்த மகளை தோளில் தூக்கிச்சென்று அடக்கம் செய்த தந்தை

கொரோனா தொற்றால் உயிரிழந்த தனது 11 வயது மகளை தோளில் தூக்கிக் கொண்டு தகனம் செய்வதற்கு சென்ற தந்தையின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் திலிப் என்பவரது மகள் சோனுக்கு அஜூரண சிக்கலுக்கான அறிகுறிகள் தென்பட்டதாகத் தெரிகிறது. அதனைத்தொடர்ந்து த்னக்கு தெரிந்த ஒருவரின் பரிந்துரையின் படி, திலிப் மகளை பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸிலில் உள்ள ஒரு மருத்துவமனையில்அனுமதித்துள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்தனர். அதனைத்தொடர்ந்து அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

இதனையடுத்து அடுத்தநாள் திங்கட்கிழமை இறந்த தனது மகளை தகனம் செய்வதற்காக ஜலந்தர் ராம்நகர் சாலையில் எந்தவித பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி திலிப் தூக்கிச்சென்றார். உடன் அவரது மகனும் சென்றார். அதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

image

மகளின் இறுதிசடங்கை மேற்கொள்ள அதிகாரிகள் யாரும் முன்வரவில்லையா என திலிப்பிடம் கேட்ட போது, “ நான் படிப்பறிவில்லாத ஏழை. ஆகையால் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. என் பகுதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொள்வதெற்கெல்லாம் எனக்கு நேரமில்லை. எனது மகளுக்கு கொரோனா தொற்று இருந்த போதே யாரும் உதவ முன்வரவில்லை.

மருத்துவமனையில் உள்ள ஒரு ஊழியர் எனது மகளின் சடலத்தை ஒரு தாளை கொண்டு மூடி தந்தார். அவளுக்கான இறப்புச் சான்றிதழை வழங்கிய அவர் கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் எதனையும் எனக்கு தரவில்லை. அவளை எந்த வித பாதுகாப்பு உபகரணங்களின்றி கொண்டு சென்றேன். எனது பகுதியில் இருந்த ஒருவரிடம் 1000 ரூபாய் உதவி பெற்று விறகுகட்டைகள் வாங்கி எனது மகனுடன் மகளுக்கான இறுதிச்சடங்கை செய்தேன்” என்றார்

Author: admin