அதிதீவிர புயலாக குஜராத் கரையை கடக்கும் டவ்-தே புயல்: மணிக்கு 160 கி.மீ வரை காற்று வீசும்

அரபிக் கடலில் உருவாகி உள்ள டவ்-தே புயல் இன்று இரவு 8 முதல் 11 மணிக்குள் அதிதீவிர புயலாக குஜராத் மாநிலம் போர்பந்தல் மற்றும் மஹூவா பகுதிக்கு உட்பட்ட கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் பொது மணிக்கு 150 முதல் 160 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குஜராத் மற்றும் டையூ பகுதிகளுக்கு ரெட் அலர்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. மும்பையிலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் புயல் மையம் கொண்டிருப்பதால் அதிகளவில் மும்பை மாநகரில் மழை பொழிவு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயலால் கேரளா, கர்நாடகா மற்றும் கோவா பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. 

இந்தப் புயலின் சூறாவளி காற்றால் மரங்கள் ஆங்காங்கே வேருடன் பெயர்ந்துள்ளன, சில இடங்களில் மின்சார சேவையும் தடைபட்டுள்ளது. நாடே கொரோனாவின் பிடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், இந்தப் புயலும் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

டவ்-தே புயல் எதிர்கொள்ள இந்திய விமானப் படை ஆயத்தம்

இதனிடையே, டவ்-தே புயலை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளுக்காக, மே 16 அன்று, தேசிய பேரிடர் நிவாரணப் படையின் (என்.டி.ஆர்.எஃப்) 167 பணியாளர்களையும், 16.5 டன் நிவாரணப் பொருட்களையும் ஏற்றிக் கொண்டு, இரண்டு சி-130ஜே மற்றும் ஒரு ஆன்-32 இரக விமானங்கள், கொல்கத்தாவிலிருந்து அகமதாபாத்திற்கு சென்றுள்ளன. அன்-32 விமானம் இப்போது அகமதாபாத்திற்கு சென்று கொண்டிருக்கிறது.

மற்றொரு சி-130ஜே மற்றும் இரண்டு ஆன்-32 விமானங்களும். 121 என்.டி.ஆர்.எஃப் பணியாளர்களையும் 11.6 டன் நிவாரணப் பொருட்களையும் விஜயவாடாவிலிருந்து அகமதாபாத்திற்கு கொண்டு சென்றன. மேலும், 2 சி-130ஜே விமானம், 110 பணியாளர்களையும், 15 டன் சரக்குகளையும் என்.டி.ஆர்.எஃப்-க்கு புனேவிலிருந்து அகமதாபாத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

Author: admin