கொரோனா விரைவுச் செய்திகள் மே 17: ரெம்டெசிவிர் விற்பனை நிறுத்தம் முதல் தமிழகம் 2ம் இடம் வரை

Hi

> தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையிலும், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் வெளியே சுற்றித்திரிவது தொடர்கிறது. பல இடங்களில் வாகனப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் காவல்துறையினரின் முயற்சியும் பலனளிக்கவில்லை.

> சென்னை ஓட்டேரியில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் கோவிட் தடுப்பூசி போடும் சிறப்பு முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் வைத்தார்.

> தமிழகம் முழுவதும் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நிறுத்தப்பட்டதால், கோவையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மற்ற பகுதிகளுக்கு வந்திருந்த மக்கள் மருந்து விற்பனை இல்லாததால் ஏமாற்றுத்துடன் திரும்பிச் சென்றனர்.

> தண்ணீரில் கலந்து குடிக்கும் கொரோனா மருந்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அறிமுகப்படுத்தியுள்ளார். இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூக்ளியர் மெடிசன் அண்ட் அலைட் சயின்ஸ் மற்றும் டாக்டர் ரெட்டிஸ் மருந்து நிறுவனமும் இணைந்து, 2-DG என்ற மருந்தை கண்டுபிடித்துள்ளன.

> அதிமுக, இடதுசாரிகள் ஆகிய கட்சிகளின் சார்பிலும், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோரும் கொரோனா நிவாரண நிதி வழங்கியுள்ளனர். அதிமுக சார்பில் ரூ.1 கோடி மற்றும் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களின் ஒரு மாத ஊதியம் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன், முதல்வரிடம் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை அளித்தார். நடிகர் ரஜினிகாந்த், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கொரோனா நிவாரண நிதியாக ரூ.50 லட்சம் வழங்கினார்.

> கொரோனா தடுப்பு ஆலோசனைக்காக அமைக்கப்பட்ட 13 சட்டமன்ற கட்சிகளின் எம்எம்ஏக்கள் குழுக் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் குழுவின் முதல் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

> தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை மேலும் சிறிதளவு குறைந்துள்ளது. எனினும் உயிரிழப்பு அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து 2ஆவது நாளாக குறைந்து 33,075 ஆக பதிவாகியுள்ளது. உயிரிழப்புகள் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு அதிகரித்து 335 ஆக பதிவாகி உள்ளது.

> இ – பதிவு முறையில் திருமணம் என்ற பிரிவு நீக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்காக நிறைய பேர் விண்ணப்பிப்பதாகவும், அதிகம் பேர் வெளியில் வரக்கூடிய சூழல் இருப்பதால் அந்த பிரிவு நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

> ஆவி பிடித்தால் கொரோனா குணமாகிவிடும் என்று கடந்த சில நாட்களாக பல தரப்பில் இருந்து அறிவுரைகள், உதாரணங்கள், வலைதள வீடியோக்கள் பரவி வருகின்றன. இந்தச் சூழலில், பொது இடங்களில் ஆவி பிடிப்பதை யாரும் ஊக்குவிக்க கூடாது என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

> இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மிகமிகக் குறைவான அளவிலேயே ரத்தம் உறைதல் போன்ற மோசமான பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

> சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் படுக்கைகள் கிடைக்காததால், கொரோனா நோயாளிகள் ஆம்புலன்ஸிலேயே காத்திருக்கும் நிலை மீண்டும் ஏற்பட்டது.

தமிழகத்திலேயே மிக அதிகமாக சென்னையில் கொரோனாவின் தாக்கம் உள்ளதால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. இரு தினங்களுக்கு முன், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் படுக்கைகள் இல்லாத காரணத்தினால், ஆக்சிஜன் வசதிக்காக ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.

அரசு மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக நீண்ட வரிசையில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் காத்திருக்கும் நிலை மெல்ல குறையத் தொடங்கியது. இந்நிலையில், தற்போது மீண்டும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முன்பாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரிசையில் நிற்க தொடங்கின. இதனால், மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைக்கும் வரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற வந்த நோயாளிகள் ஆம்புலன்ஸிலேயே தங்கியிருக்கும் அவலநிலை ஏற்பட்டது.

> நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மருத்துவர்களிடம் கொரோனா சிகிச்சை தொடர்பான ஆலோசனைகளை பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

> மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒரு சிலர் உயிரிழந்திருப்பதாக அவர்களது உறவினர்கள் குற்றம்சாட்டிய நிலையில், அதனை மருத்துவமனை நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

> புதுச்சேரி அரசு கோவிட் மருத்துவமனை அவல நிலை குறித்து வெளியான வீடியோவை தொடர்ந்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் முதன் முறையாக கொரோனா பாதுகாப்பு முழு உடை அணிந்து சென்று கோவிட் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.

> இயக்குனரும், நடிகருமான அருண்ராஜா காமராஜாவின் மனைவி கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அவருக்கு வயது 38.

> கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் நிதிஷ் வீரா உயிரிழந்தார். வல்லரசு திரைப்படம் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமான இவர், செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த புதுப்பேட்டை திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். இதன் பின் வெண்ணிலா கபடிக் குழு உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்து வந்த நிதிஷ் வீரா இறுதியாக ரஜினிகாந்துடன் காலா, தனுசுடன் அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

> இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்திற்கும் கீழாக குறைந்தது. ஆயினும் இறப்பு குறையவில்லை. கடந்த 24 மணிநேரத்தில் 4,106 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் 2,81,386 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

> இந்திய அளவில் தினசரி கொரோனா பாதிப்பில் தமிழகம் 2ஆவது இடத்தில் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில்தான் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவ்விரு மாநிலங்களுடன் உத்தரப்பிரதேசம், டெல்லி, கர்நாடகாவில்தான் கொரோனா உயிரிழப்புகள் அதிகம் உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

> நாடெங்கும் கொடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா 2ஆவது அலை பொருளாதார மீட்சியையும் தடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Author: sivapriya