லெபனானில் இருந்து ஏவப்பட்ட ராக்கெட்டுகள் – பீரங்கி மூலம் குண்டு மழைப்பொழிந்து பதிலடி கொடுத்த இஸ்ரேல்

null

ஜெருசலேம்,

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. காசா முனை மற்றும் மேற்கு கரை என்று மொத்தம் இரண்டு பகுதிகளாக பாலஸ்தீனம் உள்ளது.

காசா முனையை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது. மேற்குகரை பகுதியின் பாலஸ்தீன அதிபராக முகமது அப்பாஸ் செயல்பட்டு வருகிறார். மேற்குகரையின் சில பகுதிகளை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

இதற்கிடையில், கடந்த வாரம் முதல் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இரு தரப்பும் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தினர். காசா முனையில் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில் பொதுமக்கள் பலரும் உயிரிழந்தனர். இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலில் கேராளாவை சேர்ந்த சௌமியா என்ற பெண் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். காசா முனையில் 212 பேர் உயிரிழந்தனர்.

காசா முனையில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை கண்டித்து மேற்குகரை பகுதியில் போராட்டம் மற்றும் வன்முறை ஏற்பட்டுள்ளது. காசா மட்டுமின்றி இஸ்ரேலின் அண்டை நாடான லெபனானிலும் போராட்டங்கள் வெடித்தது.

காசாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை கண்டித்து லெபனானில் இருந்து நுற்றுக்கணக்கானோர் இஸ்ரேல் எல்லையில் குவிந்து கடந்த 2 நாட்களுக்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கடந்த 2 நாட்களில் லெபனானில் இருந்து இஸ்ரேலை குறிவைத்து 2 முறை ராக்கெட் தாக்குதல் நடைபெற்றது. இதனால், இஸ்ரேல்-லெபனான் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. சிரியாவில் இருந்தும் இஸ்ரேலை குறிவைத்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், லெபனானில் இருந்து இஸ்ரேலை குறிவைத்து மூன்றாவது முறையாக இன்றும் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. லெபனானின் தெற்கு பகுதியில் இருந்து இஸ்ரேலை குறிவைத்து மொத்தம் 6 ராக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளது.

இந்த ராக்கெட்டுகள் அனைத்தும் இஸ்ரேல் எல்லையை வந்தடையாமல் லெபனான் நாட்டுக்குள்ளேயே விழுந்துவிட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. மேலும், இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ராக்கெட்டுகள் ஏவப்பட்ட இடத்தை குறிவைத்து பாதுகாப்பு படையினர் பீரங்கிகள் மூலம் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு மற்றும் ஈரான் ஆதரவு பயங்கரவாத அமைப்பே இஸ்ரேலை குறிவைத்து இந்த ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லெபனானில் இருந்து இஸ்ரேலை குறிவைத்து ஏவப்பட்ட ராக்கெட்டு தாக்குதல் இரு நாட்டுக்கும் இடையே போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இஸ்ரேல் – லெபனான் எல்லையில் ஐ.நா.சபையின் அமைதிப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Author: sivapriya