உலக நாடுகளுடன் 8 கோடி கொரோனா தடுப்பூசிகளை பகிர்ந்துகொள்ள அமெரிக்கா முடிவு

null

வாஷிங்டன்,

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமடைந்து வருகிறது. இதனால், அந்நாட்டில் கொரோனா பரவல் பெருமளவு குறைந்துள்ளது.

அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் 46 சதவிகிதம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. அதாவது, சுமார் 15 கோடியே 40 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. அதேவேளை 11 கோடியே 70 லட்சம் பேருக்கு கொரோனா தடுபூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டு விட்டது.

இதனை தொடர்ந்து கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ் செலுத்திக்கொண்டவர்கள் பொதுஇடங்களில் முகக்கவசம் அணிய கட்டாயத்தேவையில்லை என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அமெரிக்காவில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்பதை காட்டுகிறது.

இதற்கிடையில், உலக அளவில் பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வளர்ந்த மற்றும் செல்வந்த நாடுகள் கொரோனா தடுப்பூசியை அதிக அளவில் கையிருப்பு வைத்துள்ளதாலும், அவற்றை பிற நாடுகளுக்கு பகிராததாலும் வளர்ந்து வரும் மற்றும் ஏழை நாடுகளில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், உலக அளவில் கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் ஏற்றத்தாழ்வு நிலவி வருகிறது.

இதனை தொடர்ந்து வளர்ச்சியடைந்த நாடுகள் கொரோனா தடுப்பூசியை பிற வளர்ந்து வரும் மற்றும் ஏழைநாடுகளுக்கு பகிர வேண்டும் என்று ஐ.நா.சபையின் பொதுச்செயலாளர் வேண்டுகொள் விடுத்திருந்தார்.

இந்நிலையில், உள்நாட்டில் கொரோனா தடுப்பூசி பலருக்கும் செலுத்தப்பட்டுள்ளதால் அங்கு தேவை குறைந்துள்ளதாலும், உலக அளவில் தடுப்பூசி விநியோகத்தில் ஏற்றத்தாழ்வு நிலவி வருவதாலும் தங்கள் வசம் கூடுதலாக உள்ள 8 கோடி கொரோனா தடுப்பூசிகளை உலகநாடுகளுடன் பகிர்ந்துகொள்ள அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அடுத்த 6 வாரங்களில் 8 கோடி கொரோனா தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு அனுப்பி வைக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

Author: sivapriya