ரத்தக்கரை படிந்த உங்கள் கைகளால் வரலாற்றை எழுதுகிறீர்கள் – ஜோ பைடன் மீது துருக்கி அதிபர் விமர்சனம்

null

அங்காரா,

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. காசா முனை மற்றும் மேற்கு கரை என்று மொத்தம் இரண்டு பகுதிகளாக பாலஸ்தீனம் உள்ளது.

காசா முனையை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது. மேற்குகரை பகுதியின் பாலஸ்தீன அதிபராக முகமது அப்பாஸ் செயல்பட்டு வருகிறார். மேற்குகரையின் சில பகுதிகளை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

இதற்கிடையில், கடந்த வாரம் முதல் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இரு தரப்பும் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தினர்.

காசா முனையில் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில் பொதுமக்கள் பலரும் உயிரிழந்தனர். இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலில் கேராளாவை சேர்ந்த சௌமியா என்ற பெண் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். காசா முனையில் குழந்தைகள் உள்பட 212 பேர் உயிரிழந்தனர்.

இதற்கிடையில், காசா முனை மீதான தாக்குதல் விவகாரத்தில் இஸ்ரேலுக்கும் அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கு தன்னை தற்காத்துக்கொள்ள அனைத்து உரிமைகளும் உள்ளது என்று தெரிவித்து வரும் அமெரிக்கா ஐ.நா.சபையில் இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் தடையாக இருந்து வருகிறது.

மேலும், இஸ்ரேலுக்கு அதிநவீன ஆயுதங்களை விற்பனை செய்ய ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஆயுதங்களுக்கும் இந்த விற்பனையில் இடம்பெற்றுள்ளது.

மொத்தம் 735 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்கள் இஸ்ரேலுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த ஆயுதங்களின் இந்திய மதிப்பு 5 ஆயிரத்து 381 கோடியே 22 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் ஆகும்.

இந்த ஆயுத விற்பனை காசா மீது இஸ்ரேல் தனது தாக்குதலை அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. அதேவேளை, காசாவில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனிய போராளிகளுக்கும் இடையே எட்டு நாட்கள் போருக்கு பின்னர் போர் நிறுத்தத்திற்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று அழைப்பு விடுத்து உள்ளார்.

இந்நிலையில், காசா முனையில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்து வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் கைகளில் ரத்தக்கரை படிந்துள்ளதாக துருக்கி அதிபர் தாயூப் எர்டோகன் கடும் விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக, அந்நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் நிகழ்த்திய உரையின் போது துருக்கி அதிபர் எர்டோகன் கூறுகையில், நீங்கள் (அமெரிக்க அதிபர் ஜோ பைடன்) ரத்தக்கரை படிந்த உங்கள் கைகளால் வரலாற்றை எழுதுகிறீர்கள். இப்படி பேச நீங்கள்தான் எங்களை தள்ளுகிறீர்கள்.

ஏனென்றால், இந்த விவகாரத்தில் இனியும் நாங்கள் அமைதியாக இருக்க முடியாது. இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் விற்பனை தொடர்பாக பைடனின் கையெழுத்தை நாங்கள் பார்த்தோம்’ என்றார்.

இஸ்ரேல்-காசா விவகாரத்தில் துருக்கி அதிபர் தாயூப் எர்டோகன் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார். அரபு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் தனது செல்வாக்கை அதிகரிக்கும் நடவடிக்கையில் துருக்கி அதிபர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Author: sivapriya