மருத்துவமனைகள் இல்லை; ஆக்சிஜன் அளவு அதிகரிக்க மரத்துக்கடியில் ஓய்வெடுக்கும் நோயாளிகள்

null

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், அங்கு உள்ள மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் நிரம்பி வருகிறது. இந்நிலையில், கொரோனா சிகிச்சை மையம் இல்லாததாலும், மருத்துவமனைகளில் சென்று சிகிச்சை பெற பண வசதி இல்லாததாலும் உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வைரஸ் பாதிக்கப்பட்டோர் வேப்பமர நிழலில் ஓய்வெடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கவுதம் புத்தா நகர் மாவட்டத்தில் மிவ்லா கோபால்ஹர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், அந்த கிராமத்திற்கு அருகே அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி, மருத்துவர்கள், மருந்துபொருட்கள் இல்லை. தனியார் மருத்துவமனையில் அதிக பணம் கொடுத்து சிகிச்சை பெற வசதியும் இல்ல்லை. இதனால் கொரோனா பாதிக்கப்பட்ட கிராம மக்கள் தங்கள் பகுதியிலேயே திறந்தவெளி பகுதியில் கட்டில் அமைத்து ஓய்வு எடுத்து வருகின்றனர்.

வேப்பமரத்தடியில் கட்டில் அமைத்து சில ஊசிகள் மற்றும் காய்ச்சல் மாத்திரைகளை மட்டும் சாப்பிட்டுக்கொண்டு ஓய்வு எடுத்து வருகின்றனர். மேலும், வேப்பமரத்தின் அடியில் படுத்துக்கிடந்தால் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர். இதற்கு எந்த வித மருத்துவ ஆதாரங்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக, கடந்த சில நாட்களுக்கு முன்னர் காய்ச்சல் பாதிப்பால் தனது 74 வயது தந்தையை இழந்த சஞ்ஜெய் சிங் கூறுகையில், மூச்சுத்திணறல் ஏற்படும் போது மக்கள் வேப்பமரத்தடியில் வந்து தங்கள் ஆக்சிஜன் அளவை உயர்த்திக்கொள்கின்றனர். மக்கள் இறந்துகொண்டிருக்கின்றனர். எங்களை கவனிக்க யாரும் இல்லை. எனது தந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்யவில்லை. அவர் காய்ச்சல் ஏற்பட்ட 2 நாட்களில் உயிரிழந்துவிட்டார்.

இது குறித்து அந்த கிராமத்தின் முன்னாள் தலைவர் யோகேஷ் தலன் கூறுகையில், உண்மை என்னவென்றால் கொரோனா பரிசோதனை செய்யப்படுவதில்லை. கொரோனா பரிசோதனை குறித்து அதிகாரிகளிடம் கூறியபோது எங்களிடன் போதிய ஊழியர்கள் இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர்’ என்றார்.

Facebook Comments Box
Author: sivapriya