சேலத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் திடீர் சாவு-சென்னையை சேர்ந்தவர்

null

சேலம்

சென்னை மேடவாக்கம் கூட்ரோடு பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது 65). ரியல் எஸ்டேட் அதிபரான இவர் கிரானைட் கல் புரோக்கராகவும் இருந்து வந்தார். இவர் தொழில் நிமித்தமாக பெங்களூரு மற்றும் சேலத்துக்கு அடிக்கடி வருவது வழக்கம். சேலம் வரும் போது அவர் புதிய பஸ்நிலையம் பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்குவது வழக்கம் ஆகும்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது நண்பரான நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் பகுதியை சேர்ந்த ராம்ராஜி (53) என்பவரிடம் தான் சேலம் வருவதாக பார்த்தசாரதி தெரிவித்தார். அதற்கு ராம்ராஜி, தான் உடல்நலம் பாதிக்கப்பட்டு சேலத்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் இருப்பதாக கூறினார்.
இந்த நிலையில் பார்த்தசாரதி கால்டாக்சி மூலம் நேற்று முன்தினம் சேலத்துக்கு வந்தார். முழு ஊரடங்கு என்பதால் தங்கும் விடுதிகள் அனைத்தும் மூடப்பட்டதால் எங்கு தங்குவது என்று தெரியாமல் அவர் பரிதவித்தார். இதையடுத்து அவர் சேலம் கோர்ட்டில் பணிபுரியும் மற்றொரு நண்பருக்கு தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் பார்த்தசாரதி கோர்ட்டு வளாகத்துக்கு சென்று நண்பருக்காக காத்திருந்தார். அங்கு அவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து அவர் கோர்ட்டு ஊழியரான தனது நண்பரிடம் தெரிவித்தார்.
சிறிது நேரத்தில் அவர் டாக்டரை அழைத்து கொண்டு கோர்ட்டுக்கு வந்தார். அப்போது அவரை டாக்டர் பரிசோதனை செய்தார். பார்த்தசாரதியை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லுமாறு டாக்டர் தெரிவித்தார். இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் அவர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பார்த்தசாரதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ரியல் எஸ்டேட் அதிபர் திடீரென இறந்தது குறித்து அஸ்தம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Facebook Comments Box
Author: sivapriya