சோதனைச்சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு-குறுக்கு வழியில் நுழைந்தால் சட்டப்படி நடவடிக்கை

null

சேலம்:
இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டதால் சேலம் மாவட்டத்தில் 26 சோதனைச்சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறுக்கு வழியில் நுழைந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

இ-பதிவு முறை கட்டாயம்
தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை தற்போது தீவிரமாகி வருகிறது. இதனால் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இதை கட்டுப்படுத்த வருகிற 24-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்களை தடுக்க அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முதல் மாவட்டங்களுக்குள் உள்ளேயும், வெளியேயும் பயணிப்பதற்கு இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு உள்ளிட்ட சில தவிர்க்க முடியாத காரணத்துக்கு இ-பதிவு செய்வது கட்டாயம் ஆகும். இதற்கான ஆதாரத்தை கொண்டு பயணம் மேற்கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
தீவிர கண்காணிப்பு
இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் சேலம் மாவட்டத்தில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, இ-பதிவு இல்லாமல் மாவட்டத்துக்குள் உள்ளே நுழைவதை தடுக்க சேலம் மாநகரில் அயோத்தியாப்பட்டணம், கருப்பூர், சீலநாயக்கன்பட்டி, மாசிநாயக்கன்பட்டி, அரியானூர் பிரிவு ரோடு உள்ளிட்ட ஆகிய 6 இடங்களில் தற்காலிகமாக சோதனைச்சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சோதனைச்சாவடிகளில் இ-பதிவு செய்தவர்களிடம் போலீசார் அதற்கான ஆவணங்களை பெற்று சரிபார்த்த பின்னர் அனுப்பி வைக்கின்றனர். மற்றவர்களை தடுத்து திருப்பி அனுப்பி வைத்தனர்.
இதுதவிர மாவட்டத்தில் மேலும் 20 இடங்களில் தற்காலிகமாக சோதனைச்சாவடிகள் அமைத்து தீவிர கணிகாணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இ-பதிவு செய்தவர்களை தவிர வேறு யாரையும் உள்ளே செல்ல போலீசார் அனுமதிப்பதில்லை.
சட்டப்படி நடவடிக்கை
இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-
கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காலத்திலும் தேவையில்லாமல் பலர் சுற்றி வருகின்றனர். அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சேலம் மாநகரில் இன்று (நேற்று) மட்டும் சாலையில் தேவையில்லாமல் சுற்றிய 69 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்துள்ளோம்.
இதனிடையே மாவட்டத்துக்குள் இ-பதிவு இல்லாமல் நுழைவதை தடுக்க 26 இடங்களில் தற்காலிகமாக சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்துக்குள் இ-பதிவு இல்லாமல் யாராவது குறுக்கு வழியில் நுழைந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்

Author: sivapriya